Chennai Encounter: சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் மீது, 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையில் ரவுடி சுட்டுக்கொலை:
உயிரிழந்த நபர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்ய சென்ற போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து தற்காப்பிற்காக சுட்டதில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை வியாசர்பாடி குடியிருப்பு பகுதி அருகே இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், காக்கா தோப்பு பாலஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?
சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் உள்ள பி.ஆர்.என் கார்டன், வள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலாஜி. 36 வயதாகும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது கொலை மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை தொடர்பாக பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் குண்டு வீசியது உட்பட பல வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முற்பட்டுள்ளார். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில் தொடரும் என்கவுன்டர்கள்:
சென்னை மாநகர காவல் ஆணையராக, அருண் பொறுப்பேற்ற பின் நடைபெறும் இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். முன்னதாக பகுஜன் சமாஜ்கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். அதைதொடர்ந்து தற்போது சரித்திர பதிவேட்டு குற்றவாளியான பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்னையில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட் வரும் நிலையில், அடுத்தடுத்து இரண்டு என்கவுன்டர்கள் அரங்கேறியுள்ளன. இது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.