Madurai Metro: மதுரையில் ரயில்நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ


சென்னை பொது மக்களுக்கு சமீப காலமாக வரப் பிரசாதமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான க்ரீன் லைன் வழித்தடம், விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையிலான ப்ளூ வழித்தடம் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றின் மூலம் அதிகளவு பொதுமக்கள் தினமும் பயணித்து வருகின்றனர். சென்னையில் மெட்ரோ சேவைகள் துவங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகள் ஆகின்றன.


மதுரையில் மெட்ரோ


இந்நிலையில், மதுரை, கோயம்புத்தூர், திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் தற்போது மதுரையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் அடுத்து நகர்புற பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய நகரம் மதுரை. மதுரையில் சுமார் 30 லட்சத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நகரில் மெட்ரோ ரயில் சேவையானது திருமங்கலம்-ஒத்தக்கடை ஆகிய பகுதியை இணைக்கிறது. 


மதுரை ஒத்தக்கடை - திருமங்கலம் அருகே 20 மெட்ரோ ரயில் நிலையங்களும், திருமங்கலத்தில் 45 ஏக்கரில் மெட்ரோ ரயில் பராமரிப்பு கிடங்கும் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்திற்கு ரூபாய் 1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அதிகபட்சமாக ரூ.3.5 கோடி வரை டெண்டர் கோரப்பட்ட நிலையில், ரூ.1,35,96,600க்கு டெண்டர் கோரியது ஆர்.வி.அசோசியேட் நிறுவனம்.  ஏற்கனவே மதுரை மெட்ரோவுக்கான சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.  


கோவை மெட்ரோ திட்டம்


இதனை தொடர்ந்து, கோவையிலும் மெட்ரோ ரயிலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நகரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கோவை மாநகரின் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி ரூ.9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.