சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையானது புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறும். இதனை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோயிலில் இருந்து புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு கோயிலுக்கு வந்தடைவர்.
தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும், சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். அதன்படி உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவில் கடந்த 6 நாட்களாக சிவபெருமான் நிகழ்த்திய மாணிக்கம் விற்றது, நாரைக்கு மோட்சம் அளித்தது , பொற்கிழி அளித்தது, பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ஆகிய சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆடி வீதியில் தினமும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.
சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரம்
இந்நிலையில் 7ஆம் நாள் சிவபெருமான் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் எழுந்தருளி சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். இதையடுத்து ஆவணி மூலத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம், கும்ப லக்கனத்தில் கோயிலில் உள்ள சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் நடைபெற்றது. அதில் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக கோயில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன் சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி 2-ஆம் பிரகாரம் வலம்வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து இன்று முதல் சுந்தரேசுவரர் ஆட்சி 8 மாதங்களுக்கு நடைபெறும் என்பது ஐதீகம். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை
நாளை சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலையானது புட்டுத்தோப்பு பகுதியில் நடைபெறும். இதனை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோயிலில் இருந்து புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு கோயிலுக்கு வந்தடைவர். அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 - 12 மணி வரையும், மதியம் 3 முதல் 8 மணி வரையும் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 75 years of DMK : “தெற்கிலிருந்து உதித்த சூரியன் – அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Aadhaar Update: ஃபோன் போதுமே..! ஆன்லைனில் ஆதார் பெயர், பிறந்த தேதி, முகவரியை மாற்றுவது எப்படி? வழிமுறை இதோ..!