சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையிலும் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு துறை அதிகாரிகளிடம் முடிவுற்ற அரசு திட்டங்கள் குறித்தும், முடிவு பெறாத திட்டங்கள்  தாமதம் ஆவதற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் புதர்கள் மண்டி கிடப்பதாகவும், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அச்சத்தால் வாழ்வதாகவும் எனவே புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிய மனு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸ் அப்பகுதியை சுத்தம் செய்து விட்டதாக தெரிவித்தார். இதில் அமைச்சருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மனுவில் உள்ள புகார்தாரரின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு  நடவடிக்கை எடுக்கப்பட்டதா என, கேள்வி எழுப்பினார். அமைச்சர் என தெரியாமல் எதார்த்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மனுதாரர் தனது அதிர்ப்தியை தெரிவித்தார். இதனை அடுத்து தவறான விளக்கங்களை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலரை அமைச்சர் கடிந்து கொண்டார்.

 

முதல்வன் பட பாணியில் தற்காலிக பணி நீக்கம் 

 

இந்நிலையில் அமைச்சரிடம் தவறான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாஸ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். முதல்வன் பட பாணியில் மனு கொடுத்தவரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் உதயநிதி, தவறான தகவல் தெரிவித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 5 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.