சிசிடிவி கேமராக்கள், சிசிடிவி, டிரோன் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. 

 



 

இமானுவேல் சேகரனின் 67 ஆவது நினைவு நாள்

 

இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தை தொடர்ந்து நடந்த சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67 ஆவது நினைவு நாள் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 
 

அரசு சார்பில் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை

 

 இமானுவேல் சேகரனின் மகள் பிரபாராணி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் மரியாதை செலுத்த உள்ளனர். தமிழக அரசு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்ய உள்ளனர். அதனை தொடர்ந்து  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர், அதனை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன், பாஜக சார்பில் மாநில பொதுச்  செயலாளர் பாலகணபதி தலைமையிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலும், மதிமுக சார்பாக துரை வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

 

பாதுகாப்பு ஏற்பாடு எப்படி

 

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 163 (1) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சட்ட ஒழுங்கு ADGP டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3 டிஐஜிக்கள், 20 எஸ்பிக்கள், 26 ஏடிஎஸ்பி, 61 டிஎஸ்பிகள் உள்ளிட்ட 6,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

காவல்துறை கட்டுப்பாட்டில் கெடுபிடி

 

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட 161 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 52 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரன் நினைவு நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தை திடல் உள்ளிட்ட இடங்கள் 25 இடங்களில் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ கேமரா மூலம் வாகனங்களில் வருபவர்கள், வாகனங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்காணிக்கப்பட உள்ளனர். இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிடம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் 5 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு இடங்களில் உயிர் கோபுர கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை - ராமநாதபுரம் நான்கு வழி சாலை உட்பட மாவட்டம் முழுவதும் 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். பரமக்குடி நகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.