தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் மிக முக்கியமானவை. இந்த மார்க்கெட்டுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருந்தது. அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், வடமதுரை, சாணார்பட்டி, நத்தம், தொப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் நடைபெறும் மலர்கள் அனைத்தும் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள  மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.




இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது. இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தியை (ஆகஸ்ட் - 30) முன்னிட்டு  1600 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது. அதனை தொடர்ந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, ஒரு வாரமாக விலை உயர்வு நீடித்து வருகிறது.



மல்லிகை பூ கிலோ 2000 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்று 150 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் இன்று 800 ரூபாய்க்கும்,  50 ரூபாய்க்கு விற்கப்படும் பட்டன் ரோஸ் இன்று 150 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரளி இன்று 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 


 

 

பூ - இயல்பான விலை = இன்றைய விலை (கிலோவுக்கு)

 

மல்லி - ரூ.300 - 600 = ரூ.2000

சம்மங்கி - 50 = 150

பிச்சி, முல்லை - 300 = 800

ப.ரோஸ் - 50 = 150

அரளி - 30 = 250