திருச்சியைச் சேர்ந்த வீடியோ கேமராமேன் பாலகிருஷ்ணன், லைட்மேன் சத்தியமூர்த்தி, புகைப்படக்காரர் அகஸ்டின். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டினார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர்.


அப்போது மோட்டார் சைக்கிள் மண்ணில் சறுக்கி சாலையோர மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் உயிரிழந்தனர். 3 பேரின் குடும்பத்தினரும் திருச்சி வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.4.50 லட்சம், சத்தியமூர்த்தி குடும்பத்துக்கு ரூ.3.60 லட்சம், அகஸ்டின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி நேஷனல் காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தாரணி, " விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாலகிருஷ்ணன் தனக்கு பின்னால் இருவர் பயணம் செய்ய அனுமதித்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனுக்கு சொந்தமானது இல்லை. அவரது சகோதரருக்கு சொந்தமானது. இதனால் பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கான இழப்பீடு ரத்து செய்யப்படுகிறது. ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்துள்ளனர். விபத்து நிகழ்ந்ததில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த இருவருக்கும் 50 சதவீத பொறுப்பு உள்ளது. இதனால் அவர்களின் இழப்பீட்டுத் தொகை 50 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதன்படி சத்தியமூர்த்தி குடும்பத்துக்கான இழப்பீடு ரூ.1.80 லட்சமாகவும், அகஸ்டின் குடும்பத்துக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாகவும் குறைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


   




மற்றொரு வழக்கு


குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்யக் கோரி பெல்ஜியத்தை சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


சென்னை பாலவாக்கத்தில் வசிப்பவர் பீட்டர் வான் கெய்ட். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னை டிரக்கிங் கிளப்பை 2013-ல் தொடங்கி நடத்தி வருகிறேன். எங்கள் அமைப்பை சேர்ந்த திவ்யா முத்துக்குமார், நிஷா ஆகியோர் 4 ஆண்டுக்கு முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு சில குழுக்களை குரங்கனி மலை ஏற்றத்துக்கு அழைத்துச் சென்றனர். வனத்துறையில் முறையாக அனுமதி பெற்றே 27 பேர் மலையேற்றத்துக்கு சென்றனர். மலையேற்றத்தை நிறைவு செய்து கீழே இறங்கும் போது எதிர்பாராவிதமாக தீ விபத்து நிகழ்ந்தது. காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சியை ஒருங்கிணைந்த 4 பேர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.


மலையேற்றக் குழுவினர் காட்டுக்குள் செல்வதற்கு வனத் துறையினர் கட்டணம் வசூலித்தனர். அதற்கான ரசீது வைத்திருந்தவர்கள் தீ விபத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த மலையேற்றத்துக்கு தலைமை வகித்ததாக என் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தீ விபத்து நிகழந்தபோது நான் பெல்ஜியம் நாட்டில் இருந்தேன். எனவே, போடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குரங்கனி தீ விபத்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்து, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மனு தள்6ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.