இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் முழு சந்திர கிரகணம் 2.39 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் சூரியன் பூமி சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் வானியல் நிகழ்வான பகுதி சந்திர கிரகணம் மதுரை மாவட்டத்தில் மாலை 5.54 மணியிலிருந்து 6.19 மணி வரை தென்படும் என அறிவியல்  அறிஞர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த சந்திரகிரகணத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மதுரை வைகையாற்றின் செல்லூர் இணைப்பு பாலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 



 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சந்திரகிரகணம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கவும், பொதுமக்கள் துல்லியமாக காண்பதற்காக டெலஸ்கோப், பைனாகுலர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் , பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் முழுவதுமாக மேக மூட்டத்துடன் வானம் தென்பட்டதால் சந்திரகிரகண நிகழ்வை காணமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.



 

 இதனிடையே கிரகணங்களின் போது உணவு உண்ணக்கூடாது என்பது போன்ற மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சந்திரகிரகண நேரத்தின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுண்டல் வழங்கப்பட்டது.