சிவகங்கை மாவட்டம் மானாமதுரை யூனியனுக்கு உட்பட்டது தெ.புதுக்கோட்டை  கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் இப்பகுதி மக்கள் பெரியளவு விவசாயம் செய்து வந்தனர். வைகை ஆற்றில் இருந்து கிடைக்கக்கூடிய நீரால் தான் கண்மாய் முழுமையாக நிறையும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக போதுமான மழைப் பொழிவு இல்லாததால் இப்பகுதியில் விவசாயம் குறைந்துவிட்டது. இதனால் கண்மாய்கள் தூர்வாரப்படாமலும், மண் மேவி குப்பைகள் சூழ்ந்து வாய்கால்களின் பாதை அழிந்துவிட்டது.



 

இதனால் கண்மாயின் மடைகளும் முடங்கி விட்டது. 100 நாள் வேலை பணியால் கூட சரி செய்யமுடியவில்லை. பொதுமக்கள் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பயனில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் தற்போது பெய்த கனமழையால் கண்மாயில் நீர் நிறைந்துள்ளது. ஆனாலும் வாய்கால்கள் முறையாக இல்லை என்பதால் கண்மாய் நிறைந்தும்,  விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.



தண்ணீர் முறையாக வெளியேறாத காரணத்தால் பக்கத்து கிராமத்திற்குள் நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. விவசாய நிலங்களுக்குள் புகுந்த நீரால் பயிர்கள் அழுகுகிறது. எனவே வாய்கால்கள் சரிசெய்து இப்பகுதியில் மக்களின் விவசாயத்தை காப்பாற்றவும், ஊருக்குள் புகும் தண்ணீர் தடுக்கவும் பொதுப்பணித்துறையும்,மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 





இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசந்திரன் கூறுகையில்," எங்கள் கிராமத்து கண்மாயை முறையாக தூர்வார வேண்டும். வாய்கால்களை சரிசெய்ய வேண்டும். பல முறை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுப்பணித்துறையுடன் இணைந்து கண்மாய் தூர்வார ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

 



இது குறித்து சம்மந்தப்பட்ட  பொதுப்பணித்துறை அதிகாரி முத்துப் பாண்டியிடம் பேசினோம்..," மானாமதுரை யூனியன் பகுதியில் பல்வேறு கண்மாய்கள் தூர்வாருகிறோம். தெ.புதுக்கோட்டை கண்மாயும் தூர்வாரப்படும். அடுத்தாண்டு இந்த கண்மாய் தூர்வாரப்பட உள்ளது" என்றார்.



 

மழை காலங்களுக்கு முன்னரே கண்மாய்களை தூர்வாரினால் தான் பயனாக இருக்கும், தற்போது தண்ணீட் நிறைந்துவிட்டது. முதற்கட்டமாக கால்வாய்களையாவது விரைவாக தூர்வார வேண்டும் என கோரிக்கை எழுகிறது.