நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை கிடப்பில் போட்டது ஏன் என தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, சென்னையை சேர்ந்த சில மாணவர்கள் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி தருன்மோகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தீர்ப்பிற்கு ஒத்திவைக்கப்படுகிறது
அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் ஆஜராகி, நீட் தேர்வு மோசடி வழக்கில் மனுதாரர் சிக்கியுள்ளார். தற்போது இந்த வழக்கு விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்த மோசடியில் இடைத்தரகராக மனுதாரர் செயல்பட்டு உள்ளார். எனவே அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என வாதாடினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 5 ஆண்டுக்கு முன்பு தீவிரமாக குற்றச்சம்பவம் நடந்துள்ளது. இதுவரை அந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்பை இந்த வழக்கில் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்படுகிறது. அந்த அமைப்பின் சார்பில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு இறுதி உத்தரவுக்காக வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cricketer Natarajan: "இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!