நீட் வினாத்தாள் லீக்கானதை மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது என்றும் ஆனால், எந்தளவுக்கு அது லீக்கானது என்பதை ஆராய்ந்து வருகிறோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று தெரிவித்துள்ளார். அது பெரிய அளவில் லீக்காகவில்லை என்றால் தேர்வு ரத்து செய்யப்படாது என கூறியுள்ளார். 


நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? நீட் தேர்வு மோசடி விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இப்படிப்பட்ட சூழலில், இந்தாண்டு நடந்த நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மாணவர்களும் பயிற்சி நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.


இன்றைய விசாரணையின்போது பேசிய இந்திய தலைமை நீதிபதி, "நீட் வினாத்தாள் லீக்கானதை மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. அது எந்தளவுக்கு லீக்கானது என்பதை விசாரித்து வருகிறோம். பெரிய அளவில் லீக்காகவில்லை என்றால் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்.


கேள்வி மேல் கேள்வி கேட்ட தலைமை நீதிபதி: ஆனால், மறு தேர்வுக்கு உத்தரவிடுவதற்கு முன்பு, எந்தளவுக்கு வினாத்தாள் கசியவிடப்பட்டது என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏன் என்றால், 23 லட்சம் மாணவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த பிரச்னைகளால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.


மாணவர்கள் மீண்டும் பயணம் செய்ய வேண்டும், கல்வியாண்டு தள்ளிப்போகும். எனவே, வினாத்தாள் எந்தளவுக்கு கசிந்தது? எதன் ஊடாக கசிந்தது? தவறு செய்த மாணவர்களை அடையாளம் காண மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என கேள்வி எழுப்பினார்.


நீட் தேர்வு வினாத்தாள்கள் எப்போது தயாரிக்கப்படுகின்றது ? அது எப்போது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது ? எப்போது அச்சிடப்படுகின்றது? அச்சிடப்பட்ட பிறகு எப்போது அது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது? போன்ற அனைத்து விவரங்களையும் தேதி வாரியாக வழங்குமாறு தேசிய தேர்வுகள் முகமையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.


நீட் தேர்வு கசிவு மற்றும் நீட் தேர்வு நடக்கும் நேரம் ஆகியவற்றிற்கு இடையே கால நேரம் ஒத்துப் போகிறது என்றால் அதை நாங்கள் தீவிரமாக விசாரிக்க போகிறோம் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.