சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவர் படித்த ஏவிஎஸ் கல்லூரியில் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன், "நான் ஒரு சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். சொந்த வீடு கிடையாது, குறுகி அளவிலான வீடுதான் மண் தரையில் படுத்து உறங்கி என் வாழ்நாளை கடந்து வந்தேன்.


இதற்கு இடையில் கிரிக்கெட் விளையாட்டு ஆர்வமாக கற்று வந்தேன். ஒரு இலக்கை நோக்கி போகும் மாணவர்களான நீங்கள் அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். அப்பொழுது தான் அந்த இலக்கை உங்களால் அடைய முடியும். சிலர் நமக்கு அறிவுரை கூறினாலே அதைப் பின்பற்றுவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த அறிவுரையை முன்னுதாரணமாக எடுத்து வாழ்க்கையில் பயணித்தால் நமக்கான நல்ல இடம் கிடைக்கும். அப்படி எனக்கு உறுதுணையாக இருந்தது என் அண்ணன் தான்” என்று கூறினார். 



”எப்பொழுதெல்லாம் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டாலும் அண்ணன் அறிவுரை கேட்ட பிறகு தன் விளையாட்டில் ஈடுபடுவேன். என்னுடைய சொந்த கிராமத்தில், சொந்த செலவில் கிரிக்கெட் மைதானத்தை ஏற்படுத்தி எனது கிராமத்தை சுற்றியுள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் இந்த விளையாட்டு மைதானம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற கிரிக்கெட் வீரர்கள் தற்பொழுது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.


எதிர்காலத்தில் நீங்கள் எவ்வளவு உயரம் சென்றாலும் உங்களால் சில பேர் வாழ்ந்தார்கள் என்றால் அது வாழ்நாள் முழுவதும் உங்களுடைய தலைமுறைக்கு கேட்கும். இன்னும் என் கிராமத்தைச் சார்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எங்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும் என்னுடைய சொந்த செலவில் அவர்களை அனுப்பி வைப்பேன்.


நான் பட்ட கஷ்டங்கள் அவர்கள் படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் செய்கிறேன். அப்படி எதிர்வரும் காலங்களில் உங்களுக்கு யாராவது உதவி செய்தால் அந்த உதவிக்கான மதிப்பை நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். உதாசீனப்படுத்தக்கூடாது”
“என்றார்.


”முன்பெல்லாம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சூழ்நிலை மாறி தற்போது எல்லா துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான கடின உழைப்பு உங்களிடம் தான் உள்ளது. எந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்தத் துறையின் மீது அன்பு செலுத்த வேண்டும்.


அதேபோல நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையின் மீது எவ்வளவு அன்பு செலுத்துகிறீர்களோ, எவ்வளவு உண்மையாக இருக்கிறீர்களோ அந்த துறையில் கடின உழைப்பு எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கான பயன் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கு உதாரணமே நான்தான். எனது வீட்டில் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக ரேஷன் அரிசி சாப்பிட்டு இந்த கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வந்தேன். அதேபோல எனது அம்மா சமைக்கும் உணவுதான் எனக்கு ஹெல்தி என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொண்டேன்.


இது போன்ற விஷயங்களை நீங்கள் படி கற்களாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும். தடைகள் இல்லாமல் வாழ்க்கையில் நீங்கள் உங்களது இலக்கை அடைய முடியாது. கல்லூரிக்கு செல்வதற்கு பஸ் கட்டணம் இல்லாமல் நண்பர்களிடம் பெற்று கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி படிக்கும் காலங்களில் முறையான உணவு இல்லாமல் கல்லூரி படிப்பைமேற்கொண்டு வந்தேன்‌. இதையெல்லாம் ஒரு தடையாக நான் நினைத்திருந்தால் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன்” என்று கூறினார்.


தல தோனி மற்றும் தல அஜித் முதல் சந்திப்பு குறித்து மாணவர் கேள்விக்கு பதில் அளித்த நடராஜன், ”ஒரு சிலரை பார்த்தாலே மோட்டிவேஷன் ஆகும். சிலரை பார்த்து பேசினால் மிதப்பது போல இருக்கும். தோனியை பார்க்கும் போது அந்த வைப். அவர் இருக்கும் அணி ஏன் சிறப்பாக செயல்படுகிறது என்றால், அவரைப் பார்த்தாலே நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தோன்றும். தோனி ஒரு பாசிடிவ் மனிதர் அவர். அதேபோன்று தல அஜித் எனக்கு ஸ்பெஷல். ரொம்ப நாளாக தலையை பார்க்க வேண்டும் என்று இருந்தேன். எதார்த்தமாக ஹோட்டலில் சந்தித்தோம், அவ்வளவு பெரிய மனிதர் அனைவரையும் ஒரே மாதிரி பார்த்தார். எனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய பின்னர் அனைவரின் கார் கதவையும் திறந்து வழி அனுப்பி வைத்தார். இது போன்ற மனிதர்களை சந்திக்கும் போது வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கை வரும்” என்றார்.



”கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக நினைத்து கொள்வீர்கள். உங்களுடைய கனவு, குறிக்கோளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தால் அதற்கான பலன் பின்னோக்கி வரும். சிலருக்கு உடனே கிடைக்கும். சிலருக்கு தாமதமாக கிடைக்கும். இதெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கடின உழைப்பு இருந்தால் மட்டும்தான் அனைத்தும் நமக்கு கிடைக்கும். இந்த மாணவர் பருவத்தில் உங்களது உழைப்பு உண்மையாக இருந்தால் மட்டும் தான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும். எனது ஊருக்கு கிரிக்கெட் என்றாலே தெரியாது. இருந்தாலும் அந்த விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபட்டு இன்று நான் ஒரு நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரராக வந்துள்ளேன். 


சேலத்தில் கடந்த 28 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தமிழ்நாடு அணிக்கு விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு அணியில் மட்டும் விளையாண்டால் போதும் என நினைத்தேன் என்னுடைய கடின உழைப்பு காரணமாக இந்திய விளையாட்டு அணியில் இடம்பெற்று விளையாடினேன்.


இது எனக்கு ரொம்ப பெருமையாகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்குள் எந்த கௌரவம் இருக்கக் கூடாது. உங்களுக்கு தெரியாத விஷயங்களை மற்றவர்களை கேட்டு தெரிந்து கொள்ளவும் நான் அப்படிதான் என்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன். வாழ்க்கையில் நீங்கள் உயர செல்ல நினைக்கும் பொழுது பல தடைகள் வரும் அதை தாண்டி வரவேண்டும். அப்பொழுதுதான் நல்ல இடத்திற்கு வர முடியும். வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பெரிய இடத்துக்கு சென்றாலும் நீங்கள் கடந்து வந்த பாதை மறக்காதீர்கள். உங்களுக்காக உழைக்கும் பெற்றோர்களை மதித்து வாழ்க்கையில் நீங்கள் முன்னேற வேண்டும்” என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.