மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், மலைப்பகுதியைச் சுற்றி, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், அதற்குப் பதிலாக மதுரை பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தெரிவித்துள்ளது.


திருப்பரங்குன்றம் மலை:


மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் இந்து அமைப்பினர் வழிபடும் காசி விசுவநாதர் கோயிலும் , இஸ்லாமியர்கள் வழிபடும் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு  முன்பு தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதாகவும், இது இந்து மத வழிபாட்டிற்கு எதிராக உள்ளது என இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால், தர்காவில் பலியிடும் வழக்கமானது, முன்பு இருந்தே தொடர்ந்து வருவதாகவும், புதிய வழக்கம் இல்லை என்றும், திடீரென எதிர்க்க என்ன காரணம் என்றும் , தர்கா தரப்பினர் தெரிவிக்கின்றனர். 


144 தடை: போரட்டத்திற்கு தடை


ஆனால், இதை இந்து அமைப்பினர் மறுப்பது மட்டுமன்றி, இது காசி விசுவநாதர் ஆலய வழிபாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறி  போராட்டம் நடத்தப்போவதாக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த சிலர் அறிவித்தனர்.


இதனால், இந்த விவகாரம் தீவிரமடைந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்து மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களிடையே பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என மதுரை மாவட்டம் முழுவதும் நேற்றும்- இன்றும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்,  மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இதையடுத்து, சுமார் 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 




இந்நிலையில், 144 தடை உத்தரவை எதிர்த்தும், போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் , மதுரையைச் சேர்ந்த சுந்தரவடிவேலு மற்றும் முருகன ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அதில், இந்து முன்னணி அனுமதி போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு எதிராகவும், போராட்டத்தில் பங்குபெறுபவர்களின் வழக்கு பதிவு செய்யப்படும் என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


நீதிமன்றம் விசாரணை:


இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பியது. மேலும், திருப்பரங்குன்றம் மலையில் பலியிடுதல் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பியது. அதற்கு 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , குறிப்பாக கடந்த 18 ஆம் தேதி பலியிட சென்ற 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதுபோன்று நடப்பதற்கு முன்பே என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதையடுத்து, போராட்டம் நடத்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளனர் என்றும், ஆகையால் இன்றே போராட்டம் நடத்த அனுமதி வழங்க  வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு விழா இருப்பதால், இன்று வேண்டாம் , வேறொரு நாளில் நடத்துங்கள் என தெரிவித்தது.


Also Read: மோடிகிட்ட போய், ராஜினாமா செய்றேன்! அயோத்தி பட்டியலின பெண் மரணத்தில் கதறி அழுத எம்.பி


போராட்டத்திற்கு அனுமதி:


அப்போது, எத்தனை பேர் போராட்டம் நடத்துவீர்கள் என நீதிமன்றம் கேட்டபோது சுமார் 500 பேர் முதல் 1000 பேர் வரை என மனுதாரர் தெரிவித்ததையடுத்து, திருப்பரங்குன்றத்திற்கு பதிலாக பழங்காநத்தத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.




இன்று மாலை 5 மணி முதல் 6மணி வரை போராட்டம் நடத்தலாம் என்றும், அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதை மனுதாரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், போராட்டம் முழுவதும் வீடியோ எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், திருப்பரங்கம் மலைப்பகுதியானது, பெரும் பரபரப்புடன் இருந்து வருகிறது. 


Also Read:5வது பட்டியலை வெளியிட்ட விஜய்.! புதிய 19 தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்...