சாலைகளை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி உள்ளிட்ட சாலைகளை பலப்படுத்த 1.கோடி யே 75.லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விடப்பட்ட டென்டரை  ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. டெண்டர் விதிமுறைகளை முறையாக பின்பற்றி புதிய அறிவிப்பு வெளியிட்டு டெண்டர் நடத்திக் கொள்ளலாம் - நீதிமன்றம்.

 

சாலை தொடர்பான டெண்டர்

 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு,”சிவகங்கை மாவட்டத்தில் சாலைகளை பலப்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் கீழையூர்- தாயமங்கலம், சாலைக்கிராமம்- சருகுணி உள்ளிட்ட சாலைகளை பலப்படுத்த 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான இயந்திரங்களை சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பொறியாளரிடம் உரிய சான்று பெற்று அதனை பிப்ரவரி 26ம் தேதி மாலை 4 மணிக்குள் ஆன்லைன் மூலமாக டெண்டருக்கான ஆவணங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

 

அமைச்சர் உதவியாளர் பெயரில் டெண்டர்

 

அதனடிப்படையில் டெண்டருக்கான விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களோடு விண்ணப்பம் செய்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் உதவியாளர் இளங்கோவிற்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இளங்கோவிற்கு சொந்தமாக இயந்திங்கள் கிடையாது. இதில் அரசியல் தலையீடு உள்ளது. முறையாக விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களோடு டெண்டர்கோரிய நிலையில் எந்தவித காரணமின்றி நிராகரித்துள்ளனர். மேலும் சாலைப்பணியை தனது உதவியாளர் இளங்கோ மூலம் மேற்கொள்ள அமைச்சர் பெரியகருப்பன் முயல்கிறார். எனவே சாலையை பலப்படுத்துதல் பணிக்கான டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் அறிவிப்பு செய்து முறையாக நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. சாலை பணிக்கான விடப்பட்ட டெண்டரில் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே ஏற்கனவே விடப்பட்ட சாலை பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. டெண்டர் நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.