பழனியில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதனை சாலையோரத்தில் கொட்டினர். கிலோ 10 ரூபாய்க்கு குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வேதனை அடைந்தனர்.
தக்காளி விற்பனை:
திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் தக்காளி பழனியில் உள்ள தக்காளி மார்க்கெட்டில் வைத்து மொத்த விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தக்காளி கிலோ ரூ.40 வரையில் விற்பனை செய்யப்பட்டது.
CM Stalin: சென்னை நவீனமாகும்; எல்லாருக்கும் எல்லாம் என்பதே வளர்ச்சி- முதலமைச்சர் ஸ்டாலின்
தக்காளி விலை :
பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான அமரபூண்டி, பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. பழனி நகராட்சி தக்காளி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய தக்காளிக்கு 14 கிலோ அடங்கிய பெட்டி 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் மாற்றங்கள் என்ன? பரிந்துரைப் பட்டியல் இதோ!
கீழே கொட்டப்படும் தக்காளி:
இதன் காரணமாக மொத்த விலையில் விவசாயிகளுக்கு ஒரு கிலோ தக்காளி ஏழு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது. கிராம பகுதியில் இருந்து தக்காளியை சந்தைக்குப் பறித்து எடுத்துச் செல்லக்கூடிய செலவிற்கு கூட போதுமானதாக இல்லாததால் விவசாயிகள் தோட்டத்திற்கு அருகில் சாலை ஓரங்களில் தக்காளி பழங்களை கொட்டி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைந்த விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.