மதுரையில், அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

உயர்நீதிமன்ற கிளையில் மனு

 

மதுரை  கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சார்பில்  சாமுவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லத்தில் உள்ள 55 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க கோரி மதுரை மாநகராட்சி பிறப்பு, இறப்பு பதிவு அலுவலரிடம் மனு அளித்த நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை. ஆகவே 55 குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுதாரரது அமைப்பு பதிவு செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையமாக மனுதாரரது மழலைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள 55 குழந்தைகளுக்கான முழுமையான ஆவணங்களையும், மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் முன்பாக சமர்ப்பித்து தத்தெடுக்கப்பட்டதான உத்தரவுகளை பெற்று, அதன் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளார். 

 

நீதிமன்றம் உத்தரவு

 

ஆனால் மதுரை மாநகராட்சியின் பிறப்பு இறப்பு பதிவு அலுவலர் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை காரணம் காண்பித்து, பிறப்பு சான்றிதழ்களை வழங்க தாமதம் செய்து உள்ளார்.  சிறார்களுக்கான நீதி சட்டம் அவர்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதி, செய்வதை வலியுறுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும். சிறார் நீதிச் சட்டம், அவர்களின் பாதுகாப்பையும் உரிமையும் உறுதி செய்வதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்திற்கு சான்றுகளை வழங்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. எனவே மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் விரைவாக எவ்விதமான காலதாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.