83 ஆயிரம் மரக்கன்றுகளை நடவுசெய்த மதுரையின் பாதுகாவலன். - அப்துல்கலாம் வழியில் ஒரு கோடி மரங்களை நட்டு அடுத்த தலைமுறைக்கு மதுரையை பசுமை பூங்காவாக மாற்ற முயற்சி.
அப்துல்கலாம் வழியில் பயணம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கட்டிட பொறியாளர் குபேந்திரன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக மதுரையில் பள்ளிகள், தேசிய நெடுஞ்சாலை, சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறார். இவர் குறித்து களஆய்வு செய்ததில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் வழியில் இந்தியாவை பசுமை பூங்காவாக மாற்ற செய்ய வேண்டும். அதையும் வருங்கால இளைய தலைமுறைக்கு உதவும் வகையில் இந்தியாவை தூய்மையான சுற்றுசூழல் நிறைந்த இந்தியாவாக மாற்ற ஒவ்வொருவரும் 15 மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என பேசினார். அப்துல்கலாம் கூறிய வழியில் இன்றைக்கும் பலரும் மரங்களை நட்டு வருகின்றனர். மறைந்த நடிகரின் விவேக் அவரைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என தமிழக முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். ஆனால், தனி ஒரு நபராக தனது முயற்சியில் இதுவரை 83 ஆயிரம் மரக்கன்றுகளை அரசுப் பள்ளி முதல் மதுரையின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், சுபநிகழ்ச்சிகள் வரை இலவசமாக நடவு செய்து அதனை வாரத்திற்கு இருமுறை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார்.
சிலப்பதிகார காலத்து மரங்கள்
இவர் சின்னச் சின்ன மரக்கன்றுகளை நட்டு வைக்காமல் பயனுள்ள 7 முதல் 10 அடி உயரம் அளவு கொண்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார். சிறு சிறு மரக்கன்றுகளை நடுவதன் மூலம் ஆடுகள், மாடுகள், சேதப்படுத்தும் என்பதால் அவற்றை நடுவதை தவிர்த்திருப்பதாகவும் மேலும், "நீரின்றி அமையாது உலகு" என்ற வரிகளுக்கு ஏற்ப நீரின்றி வாழாது உயிர்". என மாறிய நிலையில், மரங்களும் ஒரு உயிர் என்பதால் நடவு செய்வது மட்டுமல்லாமல் அதனை பராமரிக்க 4.5 லட்சம் செலவில் பழைய தண்ணீர் லாரி ஒன்றை வாங்கி வாரத்திற்கு இருமுறை தண்ணீர் விட்டு குழந்தை போல பராமரித்து வருகிறார். நமது மண்ணிற்கு ஏற்ற வகையில் நாட்டு வகையை சேர்ந்த புங்கை, பூவரசு, அவிலம், வேம்பு, ஆலம், வாகை, இலுப்பை, மருத மரம், ஐந்திலை பாலை, ஏழிலைப்பாலை என சிலப்பதிகார காலத்தில் உள்ள மரங்களை கூட நட்டு வைப்பதாகவும், பறவைகளுக்காக மா, நாவல், இலந்தை உள்ளிட்ட மர வகைகளும் நட்டு வைப்பதாக தெரிவித்தார். அந்த மரங்களின் பழங்களை சாப்பிடும் பறவைகள் கூட இன்னும் 10 மரங்களை உருவாக்கும் என்பதால் இந்த வகையான மரங்களை நட்டு வைப்பதாக தெரிவித்தார்.
10க்கு 100 மரக்கன்று
இந்த ஆண்டிற்குள் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான மரக்கன்றுகளை வாங்கி வந்து வளர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தனது சொந்த பணத்தில் வளரும் இளம் தலைமுறை நிற்கும் வருங்கால சந்ததியினருக்கும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் பசுமை பூங்காவாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், ’சாலை விரிவாக்க பணி என்பது அத்தியாவசியம் ஆனால் இயற்கையை அழிக்காத சாலை விரிவாக்க பணியாக இருக்க வேண்டும்’ நீதிமன்ற உத்தரவின் படி, 10 மரக்கன்றுகள் அல்ல 100 மரக்கன்றுகளை கூட தான் நட தயாராக இருப்பதாகவும் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.