மதுரையில் 2023 ஆண்டிற்கான சித்திரை திருவிழா 12 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படவுள்ள நிலையில் நேற்று காலை மிதுன லக்கனத்தில்  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டுகள் சுற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு.

 



 


சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், அம்மனும் பல்வேறு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.

 



இதனை அடுத்து முதல் நாள் நிகழ்வாக மாலை மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடம் கற்பக விருட்ச வாகனத்திலும் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுவாமியும் அம்மனும் வீதி விழா வந்தபோது மாசி வீதி முழுவதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்து சென்றனர்.




 

சுவாமி அம்மன் வீதி உலாவின் போது சுவாமியின் முன்பாக ஏராளமான சிறுமிகள் மீனாட்சியம்மன் வேடம் அணிந்தும் சிறுவர்கள் முருகன் விநாயகர் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடங்களை அணிந்தும் பல்வேறு இசை முழங்க ஊர்வலமாக சென்றனர். முன்னதாக மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்ததன் காரணமாக இரவு 7 மணிக்கு ஊர்வலம் தொடங்க இருந்த நிலையில் 8:00 மணிக்கு ஒரு மணி நேர தாமதத்திற்கு பின்பாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.