உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. 12 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மாநகரமே கோலகலம் பூண்டுள்ளது.






இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா 12 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று காலை மிதுன லக்கனத்தில்  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கோவில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டுகள் சுற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு,



சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தங்கக் கொடி மரத்தில் உற்சவக் கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், அம்மனும் பல்வேறு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.



 

 

இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை மீனாட்சி. சுந்தரேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து 4 மாசி வீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஏப்ரல் 30ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே.1ம் தேதி திக் விஜயமும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக மே - 2ம் தேதி  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும்,  மே - 3ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. அதனை தொடந்து மே - 4-ம் தேதி மாலை கள்ளழகர் எதிர்சேவை, மே - 5 தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை 5.45 முதல் 6.12 மணிக்குள் நடைபெறுகிறது. அந்த சித்திரை திருவிழாவிற்காக பல்வேறு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.