தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். இப்படியான கலைஞர்களை அரசு ஊக்கிவித்து வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்”.


ருகிவரும் கலைகளின் வரிசையில் தோல்பாவைக் கூத்துக் கலையும் ஒன்று. தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தோல்பாவைக் கூத்துக் கலையை அரிதாக பார்க்க முடிகிறது. அப்படியான கலையை தன் குடும்பத்துடன் தாங்கிப் பிடித்து அதனை வாழ்வாதாரமாக கொண்டு செல்பவர் தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  முத்து லெட்சுமண ராவ் (67).




5வது தலைமுறை:


இவர் 5-வது தலைமுறையாக இந்த தொழிலை செய்துவருகிறார். தனது நான்கு மகன்களுக்கும்  தொழிலை கற்றுக் கொடுத்து அவர்களையும் இதே தொழிலில் ஈடுபட செய்துவருகிறார். தோல்பாவைக் கூத்தின் மூலம் தனது குடும்பத்தில் 20 பேர் வயிறு பிழைக்கின்றனர் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார். ஆனால் தனது தொழிலை விரிவுபடுத்த அரசு கலைப் பண்பாட்டுத் துறை மூலம் வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது, என்று நம்மிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும் முத்து லெட்சுமண ராவ் கண்ணீரை துடைத்தபடி நம்மிடம் பேசினார்.




கிராமிய கலைஞர்கள்:


சென்னை சங்கமம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால் எனக்கு கலை பண்பாட்டுத்துறை சார்பாக வாய்ப்புகளே வழங்கப்படாமல் இருக்கிறது. தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வருகிறேன். மாவட்டத்தில் வேறு சில கிராமிய கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எனக்கு அரசு சார்பாக வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிப்படுகிறேன். இதனை தேர்வு கமிட்டி செய்கிறதா? இல்லை கலைப் பண்பாட்டுத்துறை புறக்கணிக்கிறதா? என்று தெரியவில்லை.




இன்று பிப்ரவரி 17 மற்றும் 18-ம் தேதி சென்னை சங்கமம் கிராமிய நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் என்னை புறக்கணித்துள்ளனர். என்னை சிறப்பு பார்வையாளராக பார்க்க அழைத்துள்ளனர். நானும் கலைஞன் தான் எனக்கும் வயிறு இருக்கிறது. நானும் பிழைக்க வேண்டாமா? தென்மாவட்ட பகுதியில் எங்கள் குடும்பம் மட்டும் தான் தோல்பாவைக் கூத்தை செய்து வருகிறோம். இப்படி இருக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்காதது வேதனையின் உச்சம். எனவே அதிகாரிகள் எனக்கும் அரசு நிகழ்ச்சியில் அவ்வப்போது வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் அரசு கலைநிகழ்ச்சியில் பிச்சை எடுத்து அறவழி போராட்டம் நடத்த உள்ளேன்” என்று தெரிவித்தார்.





இது குறித்து மதுரை கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணனிடம் பேசினோம்," நான் மதுரைக்கு பணிமாறுதலில் வந்து 3 மாதம் தான் ஆகிறது. முத்து லெட்சுமண ராவ் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படதாதது குறித்து ஆய்வு செய்கிறேன். தற்போது நடைபெற உள்ள நம்ம ஊர் திருவிழாவில் பங்கேற்பாளர்கள் லிஸ்ட் சென்னையில் இருந்து வந்ததுள்ளது. எனவே அடுத்த, அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக தோல்பாவைக் கூத்து கலைஞர் முத்து லெட்சுமண ராவிற்கு வாய்ப்பு வழங்க முயற்சி எடுக்கிறேன்" என நம்பிக்கை தெரிவித்தார். 


தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். இப்படியான கலைஞர்களை அரசு ஊக்கிவித்து வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Alipur Fire Accident: அதிகரித்த பலி எண்ணிக்கை - டெல்லி தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியான சோகம்