உலக நாடுகளில்  கொரோனா மூன்றாவது அலை ஆரம்பித்துவிட்டது என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் 2 வது அலையை தடுக்க மே-24 முதல் நேற்று காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. குறிப்பிட்ட விதிகளுடன் தனியாக செயல்படும் பழக்கடை, பூக்கடை, இறைச்சிக் கடை, மளிகை, பலசரக்கு உள்ளிட்ட கடைகள் நேற்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மாவட்டம் மதுரையிலும் கொரோனா பாதிப்பு  வெகுவாக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 



 

 

மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 401 நபர்களுக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,324 ஆக உயர்ந்தது. அதே போல் நேற்று 1164 நபர்கள்  குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 56,677 அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரையில் இறப்பு எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் 10666 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 



தற்போதைய சூழலில் மதுரையில்  அரசு மருத்துவமனையில் தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது அலைவந்தாலும் அதை சமாளிக்கும் வகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  மதுரையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள  சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்களில் நோய் தொற்றுள்ள நபர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். படுக்கைகள் முழுதும் காலியாக உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் மதுரையில் கொரோனா பாதிப்பு சூழல் குறைந்துள்ளதாக உணர முடிகிறது.

 

 



 

மேலும் மதுரை  நிலவரம் குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜுனிடம் பேசியபோது..,” மதுரையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவருகிறது. எனினும் களப்பணியாளர்கள் வீடு வீட சென்று கொரோனா தொற்று குறித்து விபரங்கள் சேகரித்துவருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பை முன் கூட்டியே எளிமையாக கண்டறிய முடிகிறது. பல்வேறு இடங்களில் கொரோனா நோய் தொற்று டெஸ்ட் அதிகப்படியாக எடுக்கப்படுகிறது. தீவிர நோய் தொற்று, அறிகுறி இல்லாத நோய் தொற்று என நோயாளிகளை பிரித்து சிகிச்சை அளித்துவருகிறோம். சிகிச்சையில் உள்ள நோயாளிகள் அதிகளவு குணமடைந்துள்ளனர். மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் 40 மருத்துவர்கள், 75 செவிலியர்கள், 40 லேப் டெக்னிசியன்கள், 66 ஹெல்த் இன்ஸ்பெக்டர் என இரண்டுமாத தற்காலிக ஊழியர்கள்  கூடுதலாக நியமித்துள்ளோம். இதனால் மதுரையில் விரைவாக நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்” என்று நம்பிக்க தெரிவித்தார்.