வைகை நதி


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்தும் நீர் பாசனம் பெறுகின்றது. இந்த அணை மொத்தம் 71 அடி உயரம் கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் சமயத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும். அப்போது அணை நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் வைகை அணை அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொறுத்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பருவமழை மிக தீவிரம் அடைந்ததால் அணை பகுதிகளிலும் கனமழை பெய்கிறது. ஆனால் வைகை நதி முழுவதும் பல இடங்களில் கழிவுநீர் கலந்து வருவதால் நதி மோசமடைந்து வருகிறது. அதே போல் குப்பைகள் கொட்டப்படுவதால் பல இடங்களில் குப்பை மிதக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் மதுரை மாநகர் பகுதியில் வைகை ஆற்றில் பாம்புதாரா பறவை பிளாஸ்டிக் சாக்கில் சிக்கியது. இதனை விஜயகாந்த் என்பவர் மீட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீருக்குள் குதித்துச் சென்று உயிருக்கு போராடிய பாம்புதாரா பறவை


மதுரை மாநகர் வைகையாற்றில் ஏராளமான வித விதமான பறவைகள் வந்து தங்கிசெல்கிறது. வைகையாற்றில் உள்ள மீன்களை உண்டு பசியாறிவருகிறது. இந்நிலையில் மதுரை வைகையாற்றில் நின்று கொண்டிருந்த பாம்புதாரா பறவை ஒன்று ஆற்றில் கிடந்த மீனை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக் சாக்கு ஒன்றில் அலகு மாட்டிக் கொண்டது. இதனால் நீண்ட நேரம் உயிருக்கு போராடி மயங்கியது. இதனையடுத்து பறவை துடிப்பதை பார்த்த வைகையாற்று ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விஜயகாந்த் என்ற நபர் தண்ணீருக்குள் குதித்துச் சென்று உயிருக்கு போராடிய பாம்புதாரா பறவை மீட்டார். 

 


 

அப்போது பறவையின் அலகில் சிக்கியிருந்த பிளாஸ்டிக் சாக்கை அகற்ற முற்பட்ட போது அலகில் இருந்து பற்கள் கையை அறுத்ததில் கையில் காயமடைந்து ரத்தம் சொட்டியது. இதனையடுத்து கையில் காயத்துடன் ரத்தம் சொட்டிய நிலையிலும் பாம்புதாரா பறவையை காப்பாற்றி அதனை பறக்கவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் விஜயகாந்தின் செயலை பார்த்து பெயருக்கு ஏற்ப நடந்துகொண்டார் என பாராட்டு தெரிவித்தனர்.