துணைவேந்தர் நியமனத்தை பொருத்தமட்டிலும் எந்த அளவிற்கு ஆளுநர் அவர்களாலும் அரசாலும் இடர்பாடு என்பது அனைவருக்கும் தெரியும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மதுரையில் பேட்டியளித்தார்.

 

மதுரை அரசு மீனாட்சி பெண்கள் கல்லூரியில் அமைச்சர் கோவி.செழியன்

 

அரசு கலை, அறிவியல் மற்றும்  கல்வியியல் கல்லூரிகளிலிருந்து  உதவி, இணைப்பேராசிரியர்களுக்கும், அரசு பொறியியல் கல்லூரிகள் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கான அரசு தொழில்நுட்பக் கல்லூரி இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கான பொதுகலந்தாய்வு மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில்  தொடங்கியது. இதில் அரசு கலை, அறிவியல் மற்றும் அவர்களின் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து 29 உதவி இணைப்பேராசிரியர்களுக்கும், அரசு பொறியியல் கல்லூரிகளிலிருந்து 5 பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களுக்கும். அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து 15 இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்களுக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விருப்ப ஆணைகள் வழங்கினார்.  அப்போது சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் மருத்துவர். கே.கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆப்ரகாம், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி ஆகியோர் உடனிருந்தனர்.

 

அமைச்சர் பாராட்டு

 

தொடர்ந்து போதை ஒழிப்பு தொடர்பான பேரணியை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். முன்னதாக  மாணவியர்களின் போதை ஒழிப்பு தொடர்பான சைகை  விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்ட அமைச்சர் மாணவிகளை அழைத்து பாராட்டினார். தமிழக முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் இது போன்ற சைகை முறையிலான விழிப்புணர்வு நாடகத்தை கொண்டு செல்ல வேண்டும். இதனை வீடியோவாக பதிவுசெய்து இணையதளத்தில் பதிவிடுங்கள் என கல்லூரி முதல்வரிடம் வலியுறுத்தினார். இதை எடுத்து கல்லூரியில் அமைக்கப்பட்ட உதவி மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் கல்லூரி புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது என பாராட்டு தெரிவித்தார்.

 

அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கோவி.செழியன்....,” தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கான 2024-2025ஆம் ஆண்டிற்கான பொதுகலந்தாய்விற்காக வெளிப்படைத்தன்மையோடு இணைய வழியாக அரசு கலை கல்லூரிகளிலிருந்து கல்வியியல் மற்றும் அறிவியல் விண்ணப்பங்களும், அரசு பலவகை 377 தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டன. பொதுகலந்தாய்வில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து 198 உதவிஇணைப்பேராசிரியர்களுக்கு ஆணை வழங்கப்படுகின்றது.  அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத்தொழில்நுட்பக் கல்லூரிகளிலிருந்து 344 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 93 பேராசிரியர்கள் இணைப்பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், இடப்பெயர்வு ஆணை வழங்கப்படுகிறது” என்றார்.

 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலிப்பணியிடங்கள் குறித்த கேள்விக்கு

 

துணைவேந்தர் நியமனத்தை பொருத்தமட்டிலும் எந்த அளவிற்கு ஆளுநர் அவர்களாலும் அரசாலும் இடர்பாடு என்பது எங்களை விட  ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு கூடுதலாக தெரியும். துணை வேந்தர் நியமனத்தில் ஒரு சுமுகமான முடிவு எடுத்து,  மாநில உரிமையும் பேணிக்காக்க வேண்டும் மாநிலத்தினுடைய ஆசிரியர்கள் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் நலனும் பேணிக்காக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் கண்ணும் கவனமாக இருந்து அறிவுரை வழங்கியிருக்கிறார். அதன்படி விரைவில் விரைவில் அந்தப் பணிகள் நிறைவு செய்யப்படும்  என்றார்.