ஆந்திராவில் இருந்து மதுரைக்கு விற்பனைக்காக 8 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 4 பேரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மதுரையில் பரவிக்கிடக்கும் கஞ்சா
தென் மாவட்டங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை அமோகமாக இருக்கிறது. கஞ்சா விற்பனையால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கஞ்சா விற்பனை கட்டுக்குள் வந்தபாடில்லை. பல இடங்களில் கஞ்சா விற்பனை எளிமையாக நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதும் சோகமான விசயம். பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் கஞ்சா பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு விற்பனைக்காக 8 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மதுரையில் விநியோகம்
ஆந்திர மாநிலத்தில் இருந்து மூட்டை, மூட்டையாக கன்டெய்னர் லாரியில் மதுரைக்கு கஞ்சா கடத்தப்பட்டுவருவதாக மதுரை கரிமேடு காவல் நிலைய காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், மதுரை ஆரப்பாளையம் தென்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவ்வழியாக வந்த கன்டெய்னர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்போது கன்டெய்னர் லாரியில் 8 மூட்டைகளில் சுமார் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வேனில் கஞ்சாவை கடத்தி வந்த ஓட்டுனர் உட்பட 4 பேரை பிடித்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மதுரையில் விநியோகம் செய்ய கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர்.
150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
பின்னர் இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த பிரேம்குமார், மதுரையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் விஜயகுமார், திருச்சியை சேர்ந்த தீபக் ஆகிய 4பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்திவந்தது குறித்தும், ஆந்திராவில் இருந்தும் கஞ்சா யாரிடம் இருந்து வாங்கிவரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை கரிமேடு காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை