பாதிக்கப்பட்டவர்கள் 1 கோடியே 40 லட்சம் பணத்தை பெற்றுத்தருமாறு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயை கைது செய்துள்ளனர் என்கிறார்கள்.



 

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்

 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ( அ.தி.மு.க., ) சகுந்தலாவின் மகன் விஜய், கவிதா என்பவரிடம், பள்ளிக்கு மேல்நிலை அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, அரசு அதிகாரிகள் பெயரில், 1 கோடியே 40 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வழக்கில், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சகுந்தலாவின் மகன் விஜயை கைது செய்துள்ளனர்.

 


 

1 கோடியே 50 லட்சம் பணம் செலவாகும்

 

இது சம்பந்தமாக விசாரித்தபோது.. திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவில் உள்ள காமராஜ் நகரில் வசித்துவரும் கவிதா என்பவர், பெரம்பலூர் மாவட்டத்தில் மகாத்மா பப்ளிக் ஸ்கூல் என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் நடத்தப்படுகின்றன. கடந்த நவம்பர் மாதம் விஜய் கவிதாவை அந்த பள்ளியில் சந்தித்து, எனக்கு அரசு துறைகளில் உயர் அதிகாரிகளிடம் நெருக்கமான பழக்கம் உள்ளது.

 

எனது அம்மா உசிலம்பட்டி சேர்மனாக இருப்பதால், கட்சி ரீதியாக அனைத்து கட்சியிலும் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள், அதன்மூலம் உங்கள் பள்ளிக்கு மேல்நிலை அங்கீகாரம் மற்றும் புதுப்பிப்பது போன்ற பணிகளை மிகவும் எளிதாக செய்து கொடுக்க முடியும். அதற்கு 1 கோடியே 50 லட்சம் பணம் செலவாகும் என தெரிவித்திருக்கிறார்.

 

பணம் ஏமாற்றியதை உணர்ந்துள்ளார்

 

அப்போது பள்ளியை புதுப்பிக்கும் காலம் என்பதால், பள்ளியின் தாளாளர் கவிதா பங்குதாரர், நண்பர்கள், மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் என ஒன்றுதிரட்டி 1 கோடியே 40 லட்சம் பணத்தை விஜய்யிடம் கொடுத்துள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து விஜய்யை தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்கள் பள்ளி சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன்.

 

விரைவில் முடிந்து விடும் என்று கூறியிருக்கிறார். அவர் கூறிய காலங்கள் முடிவடைந்தும் பல மாதங்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசி, சரிவர பதில் சொல்லாமல் வந்துள்ளார் விஜய். அதன்பிறகுதான் விஜய் தன்னை ஏமாற்றி பணத்தை பெற்றுச் சென்றுள்ளார், என்பதை கவிதா உணர்ந்துள்ளார்.

 

பின்னர் திருச்சி மாவட்ட கண்காணிப்பாளரிடம், பள்ளிக்கு மேல்நிலை அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் பணிக்காக என ஏமாற்றிய விஜய்யிடம் 1 கோடியே 40 லட்சம் பணத்தை பெற்றுத்தருமாறு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விஜயை கைது செய்துள்ளனர் என்கிறார்கள்.