மதுரை மாநகராட்சியில் 1.50கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு செய்யததாக பில் கலெக்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம்- பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு. முறைகேடு குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாக ஆணையா் தகவல்.

 

Madurai Corporation

 

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளை கொண்டுள்ளது. இதனால் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றாக மதுரை மாநகாராட்சியும் கருதப்படுகிறது. இதனால் மதுரை மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமா உள்ளது. வைகை நதி தற்போது வரை முழுமையாக சீர் செய்யப்படவில்லை. பேருந்துநிலையங்கள் அசுத்தமாக உள்ளது. என அடுக்கடுக்கன புகார்கள் மாநகராட்சி மீது உள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் 1.50கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு செய்யததாக பில் கலெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுரை மாநகராட்சியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 


 

வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக சஸ்பெண்ட்

 

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதன்மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடிக்கு வரி இழப்பீடு ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் பணிபுரியும் பில் கலெக்டர்களான ரவிச்சந்திரன், ராமலிங்கம், மாரியம்மாள், கண்ணன், ஆதிமூலம் ஆகிய 5 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தங்களுக்கான பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி கூடுதலாக வரி வசூலிக்க வேண்டிய கட்டடங்களின் வரியை குறைத்ததாக மாநகராட்சியால் விதிக்கப்பட்ட வரியை சுமார் ரூ.1.50 கோடி வரை முறைகேடாக குறைத்து காட்டியதாகவும், வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக பில் கலெக்டர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்து ஆணையாளர் தினேஷ்குமார்  உத்தரவிட்டு இருந்தார்.

 

மனு அளிக்கப்பட்டது

 

இந்நிலையில் தங்களை எவ்வித விளக்கமும் கேட்காமல், முன்னிறிவிப்பின்றி விசாரணை நடத்தாமல் பணியிடை நீக்கம் செய்ததாக பில் கலெக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மதுரை மாநகராட்சியின் 4 உதவி ஆணையாளர்களை ஒருங்கிணைத்து விசாரணை கமிட்டி ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை கமிட்டியை சம்மந்தப்பட்ட பில் கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளா்கள் 5 பேரும் வரி வசூல் மோசடிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை என ஆணையா் நியமித்த குழு முன் முன்னிலையாகி விளக்கமளித்தனா். மேலும், வருவாய் உதவியாளா்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

 

விசாரணை அறிக்கையின் படி நடவடிக்கை

 

இதையடுத்து, ஆணையா் ச.தினேஷ்குமாா் வருவாய் உதவியாளா்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தாா். மேலும், மோசடி தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்களின் விவரங்கள் முழுமையாக தெரியவரும். விசாரணை அறிக்கையின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.