மீனாட்சியின் அம்மன் கோயில் கோபுரம், ஒத்தக்கடை யானை மலை, வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால் இப்படி பெயர்பெற்ற அடையாளங்களுக்கு அடுத்தபடியா மாடக்குளம் கண்மாயும் மதுரையில் பேர் பெற்றது. "யப்பே எத்தந்தண்டி கம்மா"னு புதுசா பாக்குற மதுரை காரங்களையே வியக்க வைக்கும். சிலம்பம், ஜல்லிக்கட்டு என்று வீரம் விளைந்த மாடக்குளம் கிராமத்திற்கு இயற்கை எழில் கொஞ்சம் இந்த கண்மாய் தான் மெரினா பீச்.



 

மதுரை நகர்பகுதில இருந்து மிக அருகில் இருக்கும் இந்த மிகப்பெரும் கண்மாய் தான் நீர் ஆதாரமா இருக்கு. சுமார் 1043 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதிக்கும் பயன்பெறுவதா சொல்லப்படுது. 3400 மீட்டர் கரையின் நீலம் கொண்ட இந்த கண்மாயின் கொள்ளளவு அதிகம். கடந்த 2019-2020 அன்று ரூபாய் 85 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசின் குடிமராமத்து பணிகளின் கீழ் கண்மாய்கள்  சீரமைக்கப்பட்டது.  தற்போதைய  கோடை காலத்தில் கூட தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் மாடக்குளத்தில் மட்டுமில்லாம நகர் பகுதியிலும் நிலத்தடி நீர தக்கவைக்குது.

 



இந்நிலையில் மாடக்குளம் பகுதிக்கு தண்ணீர் வரத்து கால்வாய் உள்ள  அச்சம்பத்து பகுதிகளில்   ஏராளமான குடியிருப்பு வளாகங்கள் உள்ளது. அங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் நேரடியாக மாடக்குளம் கண்மாயில் கலக்கும் நிலை உள்ளது. இதனால் மாடக்குளம் கண்மாய் மாசடைவதாகவும், வரத்து கால்வாய்களில் சாக்கடை நீர் தேங்குவதாகவும் மாடக்குளம் பொதுமக்கள் குடியிருப்பு வளாகங்களிடம் எடுத்துக்கூறியும்,  அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர் மாடக்குளம் கிராம மக்கள். பாரம்பரியம் மிக்க மாடக்குளம் கண்மாய் நிலை மோசமடைவதாக சமூக ஆர்வலர்களும் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.

 



இந்நிலையில் மாடக்குளம் கிராமத்தை சேர்ந்த குமார் நம்மிடம்..., ‛‛பல தலைமுறையா மாடக்குளம் கண்மாய் வைகை ஆத்து மூலமா  தண்ணீ கிடைச்சுக்கிட்டு இருக்கு. இதனால எங்க ஊரு கம்மாய சாமியா மதிக்கிறோம். ஆனா சிலர் தாட்டியமா கண்மாய் வரத்துக் கால்வாயில் சாக்கடைய கலக்குறாங்க. மாடக்குளத்து தண்ணிதே மக்கள காக்குதுனு எங்க தாத்தா சொல்லுவாரு. அந்த அளவுக்கு பெயர் பெற்ற கண்மாய். வைகை ஆத்துல இருந்து தண்ணி  வரக்கூடிய பாதைகளை ஒவ்வொரு தடவையும் எங்கூருக்காரங்க சுத்தம் செஞ்சுட்டுவர்றாங்க. சுத்தபத்தமா, வச்சுக்கிறதால, தண்ணி மேவி ஆள்துளை கிணத்துள கூட நிலத்தடி நீர் ரெம்புது.

 



ஆனால்  இப்ப  கழிவுநீர் கலப்பதால் நிலத்தடி நீரில் கழிவு நீர் கலக்கக்கூடிய மோசமான நிலைய எட்டிருக்கு. எங்க ஊர் மக்கள்  மக்கள்  கழிவுநீர் கால்வாயில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்றாங்க. எங்களுடை சிரமத்த பெருசா நினைச்சு பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் மாடக்குளம் கண்மாயை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கனும்" என்றார். மாடக்குளம் கண்மாயை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் கிராம பொதுமக்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.