கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது.  இப்படியான உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பல்வேறு சிறப்புக்களை வாய்ந்த ஒன்றாகும். திருக்கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

 


 


 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆகம விதிப்படி ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெற்று வருகின்றன. காலை 6 மணிக்கு உஷாக்கால பூஜை, 9 மணிக்கு கால சந்தி பூஜை, 12 மணிக்கு உச்சி சால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை கட்டளை பூஜை, இரவு 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் பல ஆண்டுகள் மதுரை ஆதீனம் சார்பாக மாலை 6 மணிக்கு நடைபெறும் சாயரட்சை கட்டளை பூஜை மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் நெய்வேத்தியம் நடைபெற்று வந்த நிலையில், 1968 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அபிஷேக நிகழ்வு மற்றும் பூஜை நிறுத்தப்பட்டது.



 


 

இந்த நிலையில் 292 ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் மாதம் முக்தியடைந்தார். இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய  சுவாமிகள் பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தினசரி ஆதீனம் சார்பாக நடைபெற்று வந்த அபிஷேகம் மற்றும் நெய்வேத்திய சாயரட்சை கட்டளை பூஜை மீண்டும் நடைபெறும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி வழக்கமாக மாலை நடைபெறும் சாயரட்சை கட்டளை பூஜையை புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை ஆதீனம் மேற்கொள்ள உள்ளார்.