தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி. அணையை பலப்படுத்தும் பணிக்காக கடந்த 1979 ஆம் ஆண்டு நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தியதால், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட அதே ஆண்டு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. தொடர்ந்து 2015-ம் ஆண்டும், 2018-ம் ஆண்டும் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. மற்ற ஆண்டுகளில் பருவமழை போதிய அளவில் கைகொடுக்காததால் நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரு பருவமழை காலத்திலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக இருந்த போது, கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரை செய்த 'ரூல் கர்வ்' விதி கடந்த பிப்ரவரி மாதம் இந்த அணையில் அமல்படுத்தப்பட்டதால், அந்த விதியின் கீழ் கொடுக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் தான் பருவகாலத்துக்கு ஏற்ப அணையில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த விடாமல் முட்டுக்கட்டை விழுந்ததற்கும் அந்த ‘ரூல் கர்வ்' விதியே காரணம் என்று கூறப்பட்டது. புதிதாக வந்த விதியால் நீர்வரத்து இருந்தும் 142 அடியை எட்டும் நாள் தள்ளிப்போன நிலையில், தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 4-வது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து நேற்று அதிகாலை 3.55 மணி அளவில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர், கேரள பகுதிக்கு திறக்கப்படும் உபரிநீர் அளவு வினாடிக்கு 140 கன அடியில் இருந்து, 1,682 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தமிழகத்துக்கும் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 7 ஆயிரத்து 666 மில்லியன் கன அடியாக இருந்தது.அணைக்கு நேற்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடியாக இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்துக்கு ஏற்ப கேரளாவுக்கு திறக்கப்படும் உபரிநீர் அளவு மாற்றியமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மதுரை மண்டல முதன்மை பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் ஆகியோர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று ஆய்வு செய்தனர். கேரளாவுக்கு நீர் திறக்கப்படும் மதகுகளை பார்வையிட்டனர். பின்னர், அணையின் சுரங்கப் பகுதியில் கசிவுநீர் அளவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 142 அடியாக நீர்மட்டம் இருந்த போதும் கசிவுநீர் அளவு துல்லியமாக இருந்தது. இதன்மூலம் அணை மிகவும் பலமாக இருப்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. அணைக்கு நீர்வரத்து, நீர்மட்டம் நிலவரம், நீர் திறப்பு குறித்த விவரங்களை அவ்வப்போது தமிழக-கேரள மாநில அதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அணையில் இருந்து கேரள பகுதிகளுக்கு திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியார், வல்லக்கடவு, சப்பாத்து வழியாக இடுக்கி அணைக்கு சென்றது. அவ்வாறு செல்லும் வழியில் எந்த பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை.
அணையின் நீர்மட்டம் 142 அடியாக நீடிப்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தேனி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு போக அதிக அளவில் தண்ணீர் வைகை அணைக்கு செல்கிறது. அங்கிருந்து உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து 142 அடியாக நிலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதும், பேபி அணையை பலப்படுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் 5 மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்