ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு நடைபெற்று இருந்தால் நிரூபிக்கவும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சொன்ன கருத்துக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் "கொஞ்சம் அறிவு இருப்பவர்கள் இப்படி சவால் விட மாட்டார்கள். முறைகேடுகள் நடைபெற்று இருப்பதை கண்டறிவது வித்தை அல்ல. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. எனவே செல்லூர் ராஜு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றார். 



அதே போல் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பில்,” நிதியமைச்சரின் பின்புலம் என்னவென்று தெரியும். பொறுப்பான அமைச்சர் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது வரவேற்கத்தக்கது இல்லை. தற்போது ஆட்சி அதிகாரம் நிதித்துறை அவரிடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் பயன்பாடு குறித்து மதுரை மக்களுக்கு தெரியும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 75% பணிகள் மதுரை மத்திய தொகுதியான தற்போதைய நிதியமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. அதுவே முதலில் அவருக்கு தெரியவில்லை. சட்டம் உங்கள் கையில் உள்ளது எவன் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். பொத்தாம் பொதுவாக குறைகூற வேண்டாம். தவறு செய்தால் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுங்கள் என தான் கூறுகிறோம்” என்றார்.



ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இந்திரன்.  இவர் பணியிலிருந்தபோது, பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நகரப் பேருந்தில் குடிபோதையில் இருவர் தகராறு செய்வதாக காவல் நிலைய வாசலில் பேருந்தை நிறுத்தி புகார் கொடுத்தார் டிரைவர். கான்ஸ்டபிளுடன் வந்த சார்பு ஆய்வாளர் இந்திரன், பேருந்தில் தகராறு செய்தவர்களிடம் விசாரணை நடத்தினார். சத்தமாக விசாரித்துக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் விழுந்தவுடனேயே மாரடைப்பால் அவர் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.


 

மதுரை மாவட்ட காஜி நியமன தேர்வு குழுவில் இடம் பெற விரும்புவோர் மற்றும் காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட காஜி நியமன தேர்வுக்குழு அமைக்கப்பட உள்ளது.



"நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆராயக்குழு அமைத்தது போல தூய்மை பணியாளர்கள் பிரச்னைகளை ஆராயவும் குழு அமைக்க வேண்டும்" என தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன், மதுரையில்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ”தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது நியாயமான முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது கிடையாது. தி.மு.க கூட்டணி எண்ணிக்கையில்தான் பலமாக உள்ளது உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரே மக்களின் எண்ணங்கள் தெரியவரும்”  என்று நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.



நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 4-வது நாளாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கோபாலசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு நள்ளிரவு நேரங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் தொடர்பான  வழக்கு விசாரணையானது, மதுரை மாவட்ட  முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  முன்னதாக இந்த வழக்கில் உயிரிழந்த பென்னிக்ஸை பைக்கில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற நண்பரான ரவி சங்கர்  சாட்சியம் அளித்தார். 


ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா வழிகாட்டுதல்படி, மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமநாதபுரம் தர்மர், ராமேசுவரம் லிங்கவேல், கீழக்கரை ஜெயராஜ், பரமக்குடி செந்தில் ராஜ்குமார், கமுதி முத்துசாமி, கடலாடி வீரமுத்து ஆகியோர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்களில் இருந்த உணவு வகைகளை ஆய்வு செய்தனர்.இதில் நாள்பட்ட பொறித்த கோழி இறைச்சி 40 கிலோ, முந்தைய நாள் பிரியாணி 12 கிலோ ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். 28 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தனர்.



ஒட்டன்சத்திரம் அருகே கிபி 1746-ஆம் ஆண்டு டச்சு நாணயம் கண்டெடுக்கப் பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வாகரை கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். வேதியியல் விரிவுரையாளரான இவர் தனது வீட்டை புதுப்பிக்கும்போது ஒரு பழைய நாணயத்தை கண்டெடுத்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அரிஸ்டாட்டில், லெட்சுமணமூர்த்தி ஆகியோரிடம் இது குறித்து கேட்டறிந்தார்.




இலங்கை கடற்படையிடம் உள்ள படகுகளை விடுவிக்க உதவவேண்டும் என இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டைமானிடம் தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டைமான், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்டத்திற்கு நேற்று வந்தார். பட்டமங்கலத்தில் உள்ள அவரது தோட்டத்தில் தமிழ்நாடு கடலோர விசைப்படகு மாநில மீனவர்- சங்க மாநில பொதுச்செயலாளர் போஸ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.