சுதந்திர தினம்


 

நாட்டின் 78வது சுதந்திர தினம் கோலாகலமாக நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினமான நாளை வியாழக்கிழமை என்பதாலும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். வேலை செய்பவர்கள், மாணவர்கள் என பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.  

 

படையெடுக்கும் மக்கள்


 

ஆனாலும் தொடர்ந்து நான்கு விடுமுறை என்பதால் இன்று காலை முதலே பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாலைக்கு மேல் அதிகளவில் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயணிகள் சென்னை கிளாம்பாக்கம் செல்ல ஏதுவாக அதிகளவு பேருந்துகள் பல பகுதிகளில் இருந்து இயக்க மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க உள்ள நிலையில், தனியார் பேருந்துகள் தங்களது கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்துகள் மட்டுமின்றி ரயில்களிலும் இன்று அதிகளவு பயணிகள் பயணிக்க உள்ளனர். ரயில்களில் வெளியூர் பயணிக்க ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பேருந்துகளில் பயணிக்கவும் ஆயிரக்கணக்கான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறை என்பதால் விமானங்களும் தங்களது கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியுள்ளனர். இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது

 

சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு


 

சுதந்திர தின விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க விழுப்புரம் வழியாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே ஒரு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06055) சென்னையிலிருந்து ஆகஸ்ட் 14 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை ஆவடி சிறப்பு ரயில் (06056) நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 15 அன்று மாலை 03.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.10 மணிக்கு சென்னை ஆவடி சென்று சேரும்.

 

பயண சீட்டு முன்பதிவு


 

இந்த ரயில்கள் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 14 குறைந்த  கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு சரக்குப்பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.