தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான நடிகர் விஜய் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்று முழுவீச்சில் அரசியலில் இறங்க போவதாக அறிவித்து இருந்தார். அது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனி கட்சியை துவங்கினார். சினிமாவில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அரசியல் வாழ்க்கையிலும் நிச்சயம் கிடைக்கும் என மிகவும் உறுதியுடன் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சந்தோஷமான விஷயம் என்றாலும் அவர் சினிமாவில் இருந்து விலகுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தன்னுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்தது முதல் மக்களுக்கு, மாணவர்களுக்கு என பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். விஜய் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி பனையூரில் உள்ள கட்சி அலுவுலகத்தில் மீட்டிங் நடத்தி முக்கியமான ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருந்தார். அதற்காக மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் விஜய் மாநாட்டை நடத்த பல தடங்கல்கள் ஏற்பட்டு சரியான இடம் அமையாமல் போனது. எந்த இடத்தை தேர்வு செய்து வந்தாலும் அது ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. இரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான ஒரு இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் அங்கும் சாதி அமைப்பு கூட்டம் நடத்த விண்ணப்பித்ததாக சொல்லி தட்டி கழிக்கப்பட்டது. இதில் அரசியல் பின்னணி ஏதாவது இருக்குமோ என்ற பேச்சுகளும் அடிபட்டு வந்தன.
இப்படியான சூழலில் தற்போது விஜய் தன்னுடைய முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் இந்த மாநாட்டில் மக்களின் நலன், உரிமை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னரே விஜய் விழுப்புரத்தில் தங்கி மாநாட்டு பணிகளை மேற்கொள்வார் என கூறப்படுகின்றன. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.