தி.மு.க மாவட்ட செயலாளர் வீட்டின் முன்பாக தி.மு.க நிர்வாகி தீக்குளிப்பு காரணமாக பரபரப்பு. உயிருக்கு ஆபத்தான நிலையில் திமுக நிர்வாகி சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதி.
மதுரை தி.மு.க.,வில் சலசலப்பு
மதுரை மாவட்டத்தில் கிழக்கு சட்ட மன்றத் தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியும், மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் , வடக்கு தொகுதியில் கோ.தளபதியும் எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். மற்ற தொகுதியில் கூட்டணி கட்சி மற்றும் அ.தி.மு.க., மற்றும் ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பதவியிலும் உள்ளனர். மூன்று தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் முக்கிய நபர்களாக பார்க்கப்படும் நிலையில் தி.மு.க.,வில் மறைமுகமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. நேரடியாக பகை வெளிப்படவில்லை என்றாலும் மதுரை தி.மு.க.,வில் புகைச்சல் இருந்து வருகிறது. இந்நிலையில் வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.,வும்., தி.முக மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியின் வீட்டு முன் தி.மு.க நிர்வாகி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தி.மு.க நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மாவட்ட செயலாளருக்கு எதிராக கோஷம்
திருப்பரங்குன்றம் அடுத்த மூலக்கரையில் வசிக்கும் தி.முக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் வீட்டு முன்பாக தி.மு.க நிர்வாகியான மானகிரி கணேசன் என்பவர் உடலில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க கட்சி விவகாரம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கோ.தளபதியின் செயல்பாட்டுக்கு எதிராக முழக்கமிட்டபடி தீக்குளித்தாக சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சி தலைமை விசாரணை வேண்டும்
இது குறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில்...,” மானகிரி கணேசன் தற்கொலை செய்துகொள்வதற்காக தீக்குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்து மதுரை பெரியாஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். மாவட்ட செயலளார் செயல்பாட்டால் தான் இவ்வாறு செய்துள்ளார், என சொல்லப்படுகிறது. எனவே தி.மு.க., கட்சி தலைமையும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.
தற்கொலை எண்ணம் வேண்டாம்
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM MK Stalin: ஆரத்தி! ஆட்டம் பாட்டம்! டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படம்! மு.க.ஸ்டாலினை ஆச்சரியப்படுத்திய அமெரிக்க வாழ் தமிழர்கள்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Saripodhaa Sanivaaram Twitter Review : எஸ்.ஜே சூர்யா-நானி காம்போ எப்படி? சரிபோதா சனிவாரம் ட்விட்டர் விமர்சனம் இதோ!