தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக 17 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா  சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்கா சென்றார்.


மு.க.ஸ்டாலினுக்கு ஆரத்தி:


அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சான் பிரான்ஸிஸ்கோ வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.


அங்கு அவருக்கு விமான நிலையத்தில் தமிழ்நாட்டு முறைப்படி ஆரத்தி எடுத்து அங்கு வாழும் தமிழ் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும்,  அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கும் விதமாக கலச்தை சுற்றி வரவேற்பு அளித்தனர்.


தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்காவிலே தற்போது குடியேறியுள்ள நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் உள்பட அங்கு வசிக்கும் தமிழர்களும் வரவேற்றனர்.







டைம்ஸ் சதுக்கத்தில் வரவேற்பு:

மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ளது டைம்ஸ் சதுக்கம். அந்த நாட்டின் புகழ்பெற்ற இடங்களில் டைம்ஸ் சதுக்கமும் ஒன்றாகும். அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


சமூக நீதிக்காக பாடுபடும் உண்மையான தலைவர் மற்றும் தமிழின் பெருமை என்ற வாசகங்களுடன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை வரவேற்பதாக அதில் பதிவிடப்பட்டுள்ளது.


மேலும், சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் அங்கு வசிக்கும் தமிழர்கள் உற்சாகமாக நடனமாடி வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலின் இன்று அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.