மதுரை சந்தைபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் அ.தி.மு.க கழக அமைப்பு தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பெற்றுக்கொண்டார். இதில் தேர்தல் பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் வளர்மதி,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



 முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ அ.தி.மு.க தொண்டர்கள் மிக ஆர்வமாக அமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க ஒரு அருமையான அமைப்பாக இருக்கிறது. மக்கள் அ.தி.மு.கவை 31 ஆண்டுகள் ஆட்சியில் அமரவைத்து அழகு பார்த்தவர்கள். அ.தி.மு.க சாதனை மேல் சாதனை செய்து கொண்டு வருகிறது. அ.தி.மு.கவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள். அ.தி.மு.க கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்ற ராமதாஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பாமக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துக்களுக்கு  எப்படி பதில் சொல்ல முடியும். பாமகவினர் பேசுவதற்கு அ.தி.மு.க தலைவர்கள் பதில் சொல்வார்கள். நகர்புற தேர்தலில் அ.தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.




 

தி.மு.க அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அம்மா உணவகத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். தொடர்ந்து பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது போராட்டம், ஆளுநரை சந்திப்பது என செயல்படுகின்றனர் என்ற கேள்விக்கு, பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும்.

 

யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். போராட்டம் போராட்டம் என்று மக்களை தொந்தரவு செய்யவோ, இடையூறு செய்யவோ தலைவர்கள் விரும்பவில்லை என பேசினார்.