சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் குறித்து அதனை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.எஸ். இ தலைவர் திருமிகு மனோஜ் அகுஜா அவர்களுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார் அதில்..,”

 



 

சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் "வாசிப்பு உரைநடை பகுதி" (Comprehension) இடம் பெற்றுள்ளது. அது குடும்ப அமைப்பு பற்றி மிகவும் பிற்போக்கான கருத்துக்களை கொண்டதாக. உள்ளது. இதோ அதன் பகுதிகள் சில..."பெண் விடுதலை என்பது குழந்தைகள் மீதான பெற்றோர் அதிகாரத்தை சிதைத்திருக்கிறது என்பதை மக்கள் தாமதமாகவே உணர்கிறார்கள்" "கணவனின் செல்வாக்கிற்கு கீழ்ப்படிதலை மனைவி ஏற்பதன் வாயிலாகவே அவள் தன் குழந்தைகளிடம் இருந்து கீழ்ப்படிதலை பெற முடிகிறது"




இந்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. சமூக வரலாற்றின் பரிணாமத்தையும், பாலின நிகர்நிலை குறித்த நவீன சிந்தனைகளை மறுதலிப்பதாகவும் உள்ளது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் இருந்திருக்கா விட்டால் இன்னும் சதி. குழந்தை திருமணம், தேவதாசி முறை போன்ற கொடூரங்கள் நீடித்து இருக்கும். நாம் எல்லாரும் அறிவோம். 1987 வரையிலும் கூட "சதி" அரங்கேறிக் கொண்டு இருந்தது. ரூப் கன்வார் என்கிற 18 வயது பெண் திருமணமாகி 8 மாதங்களில் கணவனை இழந்து அவனின் சிதையில் ஏற்றப்பட்டு உயிர் பறிக்கப்பட்டாள். 1930 களில் இந்தியாவில் 3 கோடி குழந்தை கைம் பெண்கள் இருந்தனர். நாம் நமது குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தர வேண்டும்? பெண்ணுரிமைக்கான பெருமை மிக்க போராட்டங்கள் இந்த கொடுமைகளுக்கெல்லாம் எப்படி முற்றுப் புள்ளி வைத்தது என்பதையல்லவா? ஆனால் கேள்வித் தாளை உருவாக்கியவர்கள் மாணவர்கள் மத்தியில் பிற்போக்கான கருத்துக்களை தூவி இருக்கிறார்கள். இது அவர்களின் மனதைப் பாழ்படுத்தும் என்பதோடு தவறான பார்வைகளையும் பதியச் செய்யும்.


 

அரசியல் சாசனம் வலியுறுத்தும் பாலின சமத்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு உங்கள் நிறுவனத்தின் கீழ் வரும் பள்ளிகள் பிற்போக்கான கருத்துக்களை பரப்பக் கூடாது என்று அறிவுறுத்துமாறும் வேண்டுகிறேன்”. என குறிப்பிட்டுள்ளார்.