யூடிப்பரான மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த விவகாரத்தில் டிவிட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து திமுகவை சேர்ந்த பாலகிருஷ்ணன்  மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில அளித்த புகாரின் அடிப்படையில் மாரிதாஸ் மீது (124A, 153-A , 504  505 (1)b 505 ( 2)ஆகிய) ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி மாரிதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யபட்டது.இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், முன்பாக விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில்,  மாரிதாஸ் கைது செய்யப்பட்டு, மதுரை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை கைது செய்வதற்கு முன்பாக சுமார் 1 மணி அளவில் அவரது ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

 

முப்படைகளின் தலைமை  தளபதியின் மரணம் தொடர்பான விசாரணை செய்யப்பட்டு வரும் சூழலில், மாரிதாஸின் ட்வீட்டை படிக்கும் ஒரு சாதாரண மனிதனை, அரசுக்கு எதிராக சிந்திக்க தூண்டுவது போல உள்ளது. "திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா?" என ட்வீட் செய்துள்ளார். எந்த சதிவேலையும் நடக்கிறதா? என ட்வீட் செய்துள்ளார். இது வன்முறையைத் தூண்டும் விதமாக அமைகிறது. எந்த காரணத்தின் அடிப்படையில் மாரிதாஸ் இவ்வாறு ட்வீட் செய்தார் என விளக்கமளிக்க வேண்டும். நீதிபதி, "முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சுப்பிரமணிய சுவாமியும் சந்தேக கேள்வியை எழுப்பியிருந்தாரே? அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.

 



 

அதற்கு அரசுத்தரப்பில், " மரணத்திற்கு காரணம் தமிழக அரசு என்பது போல் தமிழக அரசின் மீது குற்றம் சாட்டும் வகையில், மாரிதாஸின் ட்வீட் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, " மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் போதும், அது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததே? முப்படைகளின் தலைமை தளபதி மரணத்தை கொண்டாடியவர்களும் உள்ளனரே? என கேள்வி எழுப்பினார்.

 

அரசுத்தரப்பில்,"அது தொடர்பாக சைபர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த ட்வீட் தமிழகத்தில் யாரால், எந்த அமைப்பால் ட்வீட் செய்யப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் பின்னிருக்கும் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே நோக்கம்.இதே போல பிற மாநிலங்களில் செயல்பட்டவர்கள் மீதும், அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து "பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ட்வீட்டை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? மாரிதாஸ் தமிழகத்தின் நேர்மைத் தன்மை குறித்தே கேள்வி எழுப்பியிருக்கிறார். மனுதாரர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர். அவர் தமிழக அரசிற்கு எதிராக, அரசியல் சூழ்ச்சியோடு இந்த ட்வீட்டை செய்துள்ளார். ஆகவே, மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்கக் கூடாது" என வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில்," பிரிவினை வாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும். தி.க., திமுகவைச் சேர்ந்தவர்கள் முப்படைத் தளபதியின் மரணம் தொடர்பாக இமோஜிகளை பகிர்வது தொடர்பாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றே ட்வீட் செய்துள்ளேன்.

 

பாலகிருஷ்ணன் வழங்கிய புகாரில், பதிவு திமுகவினர் மற்றும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். அவ்வாறெனில் பிரிவினைவாத சக்திகள் இருப்பதை அவரே ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது. தமிழக அரசுக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ எத்தகைய கருத்தையும் பதிவு செய்யவில்லை. கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டதால், கருத்து சுதந்திர சிறகுகள் காயப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது.மாரிதாஸ் மீது புகார் தெரிவித்த பாலகிருஷ்ணன் தரப்பில், வாதங்களை நாளை முன்வைப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.