திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்களும், சில வீடுகளில் ஓடுகளும் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து வருவாய்த்துறையினர் மற்றும் புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது டெல்லியில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 1.5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னரும் 2 நாட்கள் லேசான சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த அதிர்வு நின்று போனது.


தேனி : உயரம் மாறி மாறி காட்சி தரும் சிவலிங்கம்.. பூலா நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்




இந்தநிலையில் கே.கீரனூர் கிராமத்தில் நேற்று  இரவு 10.50 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பாத்திரங்கள் மேலே இருந்து கீழே உருண்டன. கட்டில்கள், நாற்காலிகள் அங்குமிங்கும் ஆடின. இதனால் பொதுமக்கள் பீதியில் வெளியே ஓடி வந்து தெரு ஓரங்களிலும், சாலைகளிலும் தஞ்சம் அடைந்தனர்.




பின்னர் அவர்கள் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தாசில்தார் முத்துசாமிக்கும், கள்ளிமந்தையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க ஏற்பாடு செய்தனர். எனினும் பொதுமக்கள் மீண்டும் நிலஅதிர்வு வந்துவிடுமோ, வீடுகள் இடிந்து விடுமோ என்ற அச்சத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும் சாலையோரங்களிலும் விடிய, விடிய தூங்காமல் காத்திருந்தனர். 




இந்தநிலையில் இன்று காலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், துணை ஆட்சியர் தினேஷ்குமார், தாசில்தார் முத்துசாமி, கனிமவள உதவி இயக்குனர் பூர்ண வேல். புவியியலாளர் அஸ்வினி ஆகியோர் கே.கீரனூர் கிராமத்துக்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் நிலஅதிர்வால் விரிசல் ஏற்பட்டு இருந்த வீடுகளை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். 




இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறுகையில், வீடு மிகவும் சேதமடைந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டம் மூலமாக புதிதாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். லேசான விரிசல் ஏற்பட்டு உள்ளவர்களுக்கு வீடு சரி செய்து தரப்படும். பொதுமக்கள் யாரும் பயப்படவேண்டாம். எதனால் இந்த நிலஅதிர்வு ஏற்படுகிறது என்பது குறித்து கண்டறியப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு போதிய இடவசதி, உணவு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.  இந்த நிலஅதிர்வு ஒட்டன்சத்திரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண