கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்ற அறிவிப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய நபர் ஒருவரின் வீடியோவை ட்விட் செய்து தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
உயர்நீதிமன்றம் குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசும் ஆடியோ ஒன்றை போட்டு காண்பித்து அந்த நபர் பேசிய நிலையில், அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து நடந்த விசாரணையில் கடந்த 17ஆம் தேதியன்று மதுரை மாநகர், தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது தெரியவந்துள்ளது. இதில் நீதிபதி குறித்து அவதூறு பேசியதாக, மாநிலதணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மதுரை மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா ஆகிய மூன்று பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போலீசார் தேடி வருகின்றனர்.