தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் தைபூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றுது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம். பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெற்றது.
இந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடிவாரத்தில் குவிந்தனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பழனி முருகன் கோவில் மலையடிவாரத்தில் பக்தர்கள் காவடிகளை சுமந்து வந்து மேளதாளத்துடன் காவடி எடுத்தும் ஆட்டம் ஆடி திருவிழாவை கொண்டாடினர்.
பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று திருக்கல்யாணமும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெற்றது. இன்று மாலை 4.45மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பங்குனி தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கிரிவீதிகளில் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தற்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் ஒரே சமயத்தில் பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி, மலைக்கோவில் மற்றும் பழனி நகர் முழுவதும் பக்தர்கள் வெள்ளம் காணப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்