முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தீவிர விசுவாசியாகவும் இருந்தவர்தான் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் சட்டமன்ற வேட்பாளராக களம் இறக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களின் நேரடிப்பார்வையில் பல முறை தேர்தலில் வெற்றி பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம்.
மறைந்த ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழகத்தின் நிதியமைச்சராகவும் இருந்து வந்தார். அதே நேரத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்ற தண்டனை பெற்று சிறை தண்டனைக்கு சென்ற போது தமிழகத்தில் இரண்டு முறை தற்காலிக முதல்வராகவும் இருந்தவர்தான் ஓ.பன்னீர் செல்வம்.இந்த நிலையில் 2001 முதல் 2006 வரை வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் மீது 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஆனால், அடுத்த அதிமுக ஆட்சி காலத்தில் 2012-ஆம் ஆண்டு, ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவகங்கை நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதித்த சிவகங்கை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
எம்பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, நாள்தோறும் விசாரணை நடத்தி, அடுத்த ஆண்டு ஜூன் 31-ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் ஆணையிட்டுள்ளார். மேலும், வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால், சம்பந்தப்பட்டவர்களின் பிணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தினார்.