தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் சென்னை, திருச்சி, தூத்துக்குடி என பல்வேறு மாவட்டங்கள் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என மழை பொழிவு இருந்தாலும் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் ஒரு சில கிராமங்களில் மழையால் வீடு இடிந்துவிட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறையை சமையல் அறையாக மாற்றி வாழ்ந்து வருவது  வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

 

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்




 

சிவகங்கை மாவட்டம்  மல்லல் ஊராட்சி பில்லத்தி கிராமத்தில்  மூதாட்டி அம்மாக்கண்ணு (70) வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து சூழலில் அம்மாக்கண்ணு தனியாக ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். தொடர் மழையால் 10 நாட்களுக்கு முன்பு இவரது வீடு இடிந்தது. வீட்டுக்கு முன் இருந்த கழிப்பறை மட்டும் தப்பியது. தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால் மூதாட்டி கழிப்பறையில் தனது பொருட்களை வைத்ததோடு, அங்கேயே சமையல் செய்து வசித்து வருகிறார். இரவில் அருகேயுள்ள கண்மாய்க் கரை கூடாரத்தில் தூங்குகிறார். இந்த சம்பவம் பலரையும் வேதனையடைய செய்துள்ளது. 



 

இது குறித்து கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், "அம்மாகண்ணு பாட்டிக்கு யாரும் இல்ல. தனியா தான் வீட்டுல இருக்காக. கார்த்திகளுக்கு வீடு இடிஞ்சு போச்சு. அதுனால புதுசா கட்டுன பாத்துரூம்ல தங்கி இருக்காக. தூங்க, கொல்ல சிரமாம இருக்குனு கம்மா கரை ஓரமா சின்ன தார்பாய்ல கொட்டக போட்டு தங்கி இருக்காக. அது எத்தன நாளைக்கு தாங்கும்னு தெரியல. அதனால அரசு விரைவாக செயல்பட்டு உதவி செய்யனும்" என்றனர். 



 


 

இதுகுறித்து அம்மாக்கண்ணு கூறுகையில், ‘’பாத்துரூம் கட்டி மாசக்கணக்கிள ஆட்சு. அதுக்கான மானியக் காசு  12 ஆயிரத்த கூட இன்னும் கொடுக்கல. முதியோர் உதவித்தொகை பெற பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் குடியிருந்த வீடும் இடிந்து போச்சு. எனக்கு உதவிபுரிய யாரும் இல்லாததால பாத்துரூம சமையக்கட்டா பயன்படுத்திறேன்" என்றார்.