சித்திரைத் திருவிழா 2024

 

உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா  12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இன்று திருதேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு   கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை  சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. அம்மனும் சுவாமியும் அதிகாலை 4.00 மணிமுதல் 4.30 மணிக்குள் கோவிலின் உள்ளே அமைந்துள்ள முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும், பிறகு ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படியிலும் எழுந்தருளினர். சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணிக்குள் தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


 


சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

 

திருத்தோரோட்டத்தை காண்பதற்காக மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பக்தர்களின் தாகத்தையும், பசியையும் போக்கும் வகையில் மாசி வீதிகளில் ஏராளமானோர் உணவுகளை கொடுத்தனர். சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட உணவுகளையும், நீர் மற்றும் மோர், ரோஸ்மில்க் என பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு பக்தர்கள் வழங்கினர். இதில் மதுரை மேலமாசி வீதி பகுதியில் செயல்படும் தமிழ்நாடு பைப் டிரேடர்ஸ் அசோசியேஷன் சங்கம் சார்பில் அதன் நிர்வாகியான சலீம் முகமது 30 வருடங்களுக்கு மேலாக பக்தர்களுக்கு ரோஸ் மில்க் வழங்கி வருகிறார். சித்திரை திருவிழா மதங்களை கடந்த சமூக நல்லிணக்க திருவிழா எனவும், தமிழகத்தில் இந்து முஸ்லீம் பேதமில்லாமல், ஒற்றுமையாக உள்ளதாகவும், இன்று ஊரில் திருவிழா இருந்தநிலையிலும், சித்திரைத்திருவிழாவில் பங்கேற்று ரோஸ்மில்க் வழங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாக சலீம் முகமது தெரிவித்தார்.