காவி என்பது தியாகத்தின் வண்ணம் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை சௌந்தராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி, அதன் முதன்மையான செய்தி சேனலான டி.டியின் (தூர்தர்ஷன்) புதிய லோகோவை வெளியிட்டது. இந்த புதிய லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காவிமயமாக்கல் என குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.


சிவப்பு வண்ணத்தில் இருந்து காவி கலருக்கு மாற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக சாடியுள்ளது. 


இப்படியான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!” என தெரிவித்துள்ளார். 






இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை சௌந்தராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், “அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் ஸ்டாலின் அவர்களே. ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது. எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்?






DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள். காவி என்பது தியாகத்தின் வண்ணம்.... நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி... அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே” என தெரிவித்துள்ளார்.  


ALSO READ | Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்