நவீன தொழில்நுட்பம் உலகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. குறிப்பாக, இணையத்தால் உலக நாடுகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டபோதிலும் தரவு திருட்டு என்பது விஞ்ஞான உலகுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக அதிக அளவில் தரவுகள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தரவு திருட்டு:
இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய தரவு திருட்டு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்கள் திருடப்பட்டு விற்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 மாநிலங்கள், 8 மெட்ரோ நகரங்களை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சைபராபாத் போலீஸ் ஒருவரை கைது செய்துள்ளனர். வினய் பரத்வாஜ் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், பைஜூஸ் மற்றும் வேதாந்து அமைப்புகளின் மாணவர்களின் தரவுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் ஃபரிதாபாத்தில் ஒரு அலுவலகத்தை அமைத்து, அமர் சோஹைல் மற்றும் மதன் கோபால் ஆகியோரிடம் இருந்து தரவுகளை சேகரித்து வந்துள்ளார்.
சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி மோசடி செய்பவர்களுக்கு லாபத்திற்காக வினய் தரவுகளை விற்பனை செய்ததை போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
திருடுபோன 66.9 கோடி மக்களின் தரவு:
இதுகுறித்து சைபராபாத் காவல்துறை தரப்பு கூறுகையில், "எட்டு மெட்ரோ நகரங்களை சேர்ந்த 1.84 லட்சம் டாக்ஸி ஓட்டுநர்களின் தரவுகள் குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்துள்ளது. அதுமட்டும் இன்றி, ஆறு நகரங்களை சேர்ந்த 4.5 லட்சம் ஊழியர்களின் தரவும் வினயிடம் இருந்துள்ளது.
ஜிஎஸ்டி (பான் இந்தியா), ஆர்டிஓ (பான் இந்தியா), அமேசான், நெட்பிலிக்ஸ், யூடியூப், பேடிஎம், போன்பே, பிக்பாஸ்கெட், புக்மைஷோ, இன்ஸ்டாகிராம், ஜோமாட்டோ உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் தரவுகளும் வினய்யிடம் இருந்துள்ளது"
இதுதொடர்பா சைபராபாத் காவல்துறை வெளயிட்ட அறிக்கையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் வைத்திருக்கும் சில முக்கியமான தரவுகளில் பாதுகாப்புப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பான் கார்டு வைத்திருப்பவர்கள், 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் தரவுகளும் அடங்கும்.
டெல்லி மின்சார நுகர்வோர், D-MAT கணக்கு வைத்திருப்பவர்கள், பல்வேறு தனிநபர்களின் மொபைல் எண்கள், NEET மாணவர்கள், காப்பீடு வைத்திருப்பவர்கள், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோரின் தரவுகளும் வினய்யிடம் இருந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 2 மடிக்கணினிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 66 கோடி பேரின் தரவுகள் திருடப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலக்கியுள்ளது.