மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் சக்திவேல் கொலை வழக்கில் 5 பேர் கைது - இதில் 3 பேர் தப்பியோட முயன்றபோது கல்குவாரி பள்ளத்தில் விழுந்ததில் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதி.
ராமநாதபுரம் கமுதியை அடுத்த கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் கருப்பாயூரணி குறிஞ்சி ரெசிடென்சி பகுதியில் வசித்துவருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக ஓ.பி.சி., அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சக்திவேல் தனது வீட்டில் இருந்து யாகப்பா நகரில் உள்ள தனது அரிசி அரவை மில்லுக்கு சென்றபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சக்திவேலின் மனைவி முத்துவேல் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சக்திவேலை கொலை செய்துவிட்டு தப்பியோடி கடச்சனேந்தல் - ஒத்தக்கடை சந்திப்பு சாலையோரத்தில் பதுங்கியிருந்த மதுரை கல்மேடு எல்.கே.பி., நகரை சேர்ந்த மருதுபாண்டி (27) மற்றும் அவரது தம்பி ரஞ்சித்குமார்(24) மற்றும் அவர்களது நண்பர்களான அண்ணாநகரை சேர்ந்த தென்னரசு(21), கடச்சனேந்தலை சேர்ந்த ஆகாஷ்(27), கே.புதூரை சேர்ந்த அகிலன் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது 5 பேரிடம் கவால்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையான சக்திவேலின் மில்லில் வேலை பார்த்த மருதுபாண்டி என்பவர் வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். அதனால் சக்திவேல் மருதுபாண்டியிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மேலும் கொலையுண்ட சக்திவேல், மருதுபாண்டியிடம் பணத்தை திருப்பி தரவில்லையென்றால் அவரது மனைவி முன் அடித்து அசிங்கப்படுத்திவிடுவேன் என கூறியுள்ளார். இந்த முன்விரோதத்தால் சக்திவேலை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சக்திவேல் கொலை வழக்கில் 5 பேர்களை கைது செய்து, அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக ஆயுதங்களை பதுக்க வைத்திருந்த பாண்டியன் கோட்டை பிருந்தா நகர் கல்குவாரி பள்ளத்திற்கு காவல்துறையினர் அழைத்துசென்றனர். அப்போது ஆயுதங்களை கைப்பற்றும் போது அங்கிருந்த காவல்துறையினரிடம் இருந்து மருதுபாண்டி, ரஞ்சித்குமார், தென்னரசு ஆகிய 3 பேரும் கல்குவாரி பள்ளத்தில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது 3பேருக்கும் கால் எலும்பில் காயம் ஏற்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அகிலன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையில் பாஜக மாநகர் ஓ.பி.சி., அணி மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 3 பேருக்கு கால்முறிவு ஏற்பட்டதோடு சக்திவேலிடம் பணிபுரியும் பணியாளர்களாலயே சக்திவேலை பணத்திற்காக கொலை செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.