சிவகங்கை மாவட்டம்  முத்துப்பட்டியில் சுமார் 22 கோடி மதிப்பில் (spices park) என்று சொல்லக்கூடிய நறுமணப் பூங்கா  கடந்த 2013 ஆம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இதனை அன்றைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டத்தின் மூலம்  சுமார் 77 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி செயல்படுத்தப்பட்டது. இந்த நறுமண பூங்காவால் விவாசாயிகள், தனியார் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பயனடையக் கூடும் என கூறப்பட்டது. 



 

சிவகங்கை, இராமநாதபுரம் பகுதியில் மிளகாய் அதிகளவு விளைவதால் அதனை  மதிப்பு கூட்டுதல் (value added), பதப்படுத்துதல் (Processing) என பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்பெறும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இஞ்சி,  சுக்கு, மல்லி, ஏலக்காய், மிளகாய் என பல்வேறு வாசனை பொருட்களை இங்கிருந்து வெளியிடங்களுக்கு தரமான பொருளாக கொண்டு செல்லலாம் என்பதால், இந்த நறுமணப் பூங்கா தமிழ்நாட்டிற்கே வரப்பிரசாதம். ஆனால் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடைந்தும்  திறக்கப்படாமல் இருப்பது தென் மாவட்ட மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நறுமண பூங்கா செயல்பட்டால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 2,500 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த திட்டம் அரசியல் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என  எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



 

இது குறித்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ஜுனன் கூறுகையில், வாசனை பயிர்களான வெள்ளை பூண்டு, மஞ்சள், மிளகு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மதிப்பு கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்யப்பட்டு வெளி நாடுகள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இப்பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் மத்திய அரசின் 33 % மானியம் கிடைக்கும் எனவும் சொல்லப்படுகிறது. பூங்கா முழுமையாக செயல்படும் நிலையில் ஏற்றுமதி வணிகம் மூலம் 1500 கோடி வருவாயும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.



 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மிளகாய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் மிளகாய் உற்பத்தியை பெருக்கும் வகையில் இப்பூங்காவை அப்போதைய மத்திய அரசு அமைத்தது. இங்குள்ள மஞ்சள், மிளகாய் அரவை இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் ஒரு டன் வரைக்கும் பவுடர் ஆக்க முடியும். அதே போல் வாசனை பொருட்களில் தேவையற்ற நுண் உயிரிகளை ஆவி மூலம் அழிக்கும் வசதியுள்ளது. அதே போல் இங்கு 700 மெட்ரிக் டன் அளவிற்கு மஞ்சள், 500 மெட்ரிக் டண் மிளாகாயை தேக்கி வைக்க முடியும். தமிழ்நாட்டிற்கு வேறு எங்கும் இல்லாத கட்டமைப்பு வசதிகள் இங்கு உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இந்த பூங்கா திறக்கப்படாமல் கிடந்தால் அதன் நிலை மிகவும் மோசமடைந்து யாருக்கும் பயனிள்ளாமல் போய்விடும்.

 

ஸ்பைஸ்சிஸ் பார்க் குறித்து வீடியோ செய்தியை காண இங்கே கிளிக் செய்யவும் - பாழாய்ப்போகும் ஸ்பைஸஸ் பார்க்..எப்பதான் திறப்பீங்க ! TamilNadu First Spices Park in Sivaganga

 

எனவே, இதனை மத்திய மாநில அரசுகள் இணைந்து திறக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார். இது குறித்து ஸ்பைசிஸ் பார்க் அதிகாரிகளிடம் பேசினோம்...," வரும் ஜனவரிக்கு முன்பாக  நிறுவனத்தை திறந்து செயல்படுத்த உள்ளோம். அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்" என்றனர்.