ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கூராங்கோட்டையில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோயிலில் மருத்துவக் குணமுள்ள உகாய் மரங்கள் இயற்கையாகவே வளர்ந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட பகுதி என சொல்லப்பட்டாலும் இங்கு பல அரியவகை மூலிகைத் தாவரங்கள் அய்யனார், கருப்பசாமி, முனீஸ்வரர் உள்ளிட்ட கிராம கோயில்களில் பல நூற்றாண்டுகளாக இயற்கையாகவே வளர்ந்து வருகின்றன. அவ்வகையில் சாயல்குடி அருகிலுள்ள கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் வளாகத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட உகாய் மரங்கள் குடைபோல் வளைந்து வளர்ந்துள்ளன. இதுகுறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,
அரிவாளால் மிரட்டி போதை மாத்திரைகளை எடுத்து சென்ற இளைஞர்கள்- சிக்கும் போது கால் உடைந்த பரிதாபம்
ராமநாதபுரம் மாவட்டம் கூராங்கோட்டையில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோயில் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஒரு கோயில் ஆகும். இக்கோயிலில் மிஸ்வாக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உகாய் மரங்கள் இயற்கையாக வளர்ந்து வருகின்றன. இவை பல நூற்றாண்டுகள் பழமையானவை. இவ்வூர் கோயில் மற்றும் குண்டாற்றுக் கரைகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட உகாய் மரங்கள் உள்ளன. இதை இப்பகுதியில் குணவாகை, வில்வவாகை என பல பெயர்களில் அழைக்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் சால்வடோரா பெர்சிக்கா (Salvadora persica) ஆகும். உகாய் பாலை நிலத்து மரங்களில் ஒன்று. இது சங்க இலக்கியங்களில் பாலைத்திணைக்குரிய மரமாக குறிப்பிடப்படுகிறது. சாம்பல் நிறத்திலுள்ள இம்மரத்தின் தண்டு புறாவின் முதுகுக்கு உவமையாகக் கூறப்படுகிறது. காய்கள் உருண்டையாய், சிவப்பு நிறத்திலும், இலைகள் முட்டை வடிவிலும் இருக்கும். இவை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூத்து மார்ச் மாதங்களில் காய்ப்பவை.
இம்மரத்தின் இலைகளும், பழங்களும் சிறுநீரக கல்லுக்கும், வீக்கத்துக்கும் மிகச்சிறந்த மருந்தாகும். இதன் வேர் பல்துலக்கப் பயன்படுத்தப்படுகிறது. காயிலிருந்து வெடித்து உதிரும் இதன் விதை மிளகைப்போல் காரம் உடையது. பறவைகள் இவ்விதைகளை உண்ணும். முகம்மது நபி இதன் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியுள்ளார்கள்.
உகாய் மரத்தின் விதையை மேய்ந்த புறா ஒன்று, அதன் காரத்தால் துடித்து, மரக்கிளையில் ஏறிக் கத்தியதாகவும், அப்போது அதன் கழுத்து மயிர் சிலிர்த்து, கண் சிவந்துபோனது எனவும் சங்க இலக்கியமான நற்றிணையில் இனிசந்த நாகனார் பாடியுள்ளார். சங்ககாலத்தைச் சேர்ந்த உகாய்க்குடிகிழார் எனும் புலவரின் ஊர் உகாய்க்குடி. இது உகாய் மரத்தின் பெயரால் அமைந்துள்ளது. கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் சொல்லப்படும் 99 மலர்களில் ஒன்றான பாங்கர் என்பது உகாய் மரத்தின் பூவைக் குறிப்பதாகக் கூறுவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கோயில்களிலும், முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் இம்மரம் அதிகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.