சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் ஒரு கல் இருப்பதாக காளத்தியேந்தலை சேர்ந்த சமயக்குமார் என்ற இளைஞர் கொடுத்த தகவலின்படி பண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில், இந்த கல்வெட்டானது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரி ஓவியத்துடன் கல்வெட்டு காணப்படுகின்றது.






பெரும் பகுதி சிதிலமடைந்த நிலையில் உள்ள அந்த கல் மூன்று அடி உயரம் உள்ளது. மேல் பகுதியில் திருமாலின் வாமன அவதார குறியீடுகளான குடையும் கமண்டலமும் ஒரு சங்கும் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளன, கீழ் பகுதியில் ஆறு வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன முதல் வரியில் அழகர்சாமி என்றும் மூன்றாவது வரியில் வாணாதிராயன் என்றும்  எழுதப்பட்டு இருக்கிறது. இந்த கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கும் வாணாதிராயன் என்பவர் மானாமதுரை பகுதியை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னராவார்.



 


 

அவரின் ஆனையின் படி அழகர்சாமி என்பவர் இப்பகுதியில் இருந்த திருமால் கோயிலுக்கு நிலங்களை தானமாக தந்ததன் நினைவாக இக்கல்வெட்டை பதிவு செய்திருக்கலாம். இந்த கல்லானது ஒரு கல்வெட்டாக மட்டுமல்லாமல் எல்லைக் கல்லாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். இப்பகுதி மக்கள் இந்த கல்வெட்டுடன் கூடிய கோட்டோவியத்தை தொட்டிக்கள் முனி என்று வணங்கி வருகின்றனர் என்று அவர்கள் கூறினார்கள்.