திண்டுக்கல் அருகே உள்ள ஏ.வெள்ளோடு மேற்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சாலமன்ராஜா (48) மற்றும் அந்தோணி அருள்ராயர் (35). ஆகியோர் ஏ.வெள்ளோட்டில் இருந்து நரசிங்கம்பட்டி, கல்லுப்பட்டி வழியாக திண்டுக்கல் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
திண்டுக்கல் யாகப்பன்பட்டி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. அப்போது வாகனத்தில் இருந்து சாலமன்ராஜா, அந்தோணி அருள்ராயர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அந்தோணி அருள்ராயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாலமன்ராஜா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த விபத்தின்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திண்டுக்கல் புறநகர் துணை கண்காணிப்பாளர் இலக்கியா, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உயிருக்கு போராடிய சாலமன் ராஜாவை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான அந்தோணி அருள்ராயர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சாலமன் ராஜாவை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்தில் பலியான சாலமன் ராஜாவுக்கு ஜோஸ்பின் கிளாரா (45) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அந்தோணி அருள்ராயருக்கு மரியசெல்வம் (34) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 கூலித்தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்